தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ இசையே வாழ்க்கை இசையால் வாழ்க்கை!

 இசையே வாழ்க்கை இசையால் வாழ்க்கை!

 இசையே வாழ்க்கை இசையால் வாழ்க்கை!


PUBLISHED ON : மார் 12, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2026 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையைச் சேர்ந்த வயலின் சகோதரிகளான லலிதா -- நந்தினி:

லலிதா: எங்கள் தாத்தா, வி.லட்சுமிநாராயணா தான் எங்கள் முதல் குரு. அவரிடம் சங்கீதமும், வயலினும் கற்றுக் கொண்டேன். தங்கை நந்தினியும் இசை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினாள்.

'சங்கீத பிதாமகன்' என அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரிடம் நாங்கள் பெற்ற பயிற்சி தான், எங்களது இசைக்கு அழுத்தமான அடித்தளத்தை கொடுத்தது.

இசை கலைஞர்களான அம்மா, பாட்டி மற்றும் உறவினர் எல்.வைத்தியநாதனிடம் இசை கற்றுக் கொண்டோம்.

இசை ஒலிக்கும் சூழலில் வளர்ந்த எங்களுக்கு, ஒரு கட்டத்தில் இசை தான் வாழ்க்கை என்று பதிந்து, அதன் மீதான பற்று அதிகரித்தது.

எனக்கு 13 வயதும், தங்கைக்கு 10 வயதும் இருந்தபோது, முதல் முறையாக இருவரும் மேடையில் வயலின் வாசித்தோம்.

சென்னையில் உள்ள, 'அலையான்ஸ் பிரான்சேஸ்' நிறுவனத்தில் பிரெஞ்ச் மொழி கற்க சென்றபோது, அங்கிருந்த இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரெஞ்ச் கலைஞருக்கு மரியாதை செய்ய நாங்கள் வயலின் வாசித்தோம்.

இதையடுத்து, போப் ஆண்டவர் முன்னிலையில் வயலின் வாசித்த முதல் கர்நாடக இசை கலைஞர்கள், பிரிட்டிஷ் பார்லிமென்டில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் தென்மாநில கலைஞர்கள், பி.பி.சி., ரேடியோவில் வயலின் வாசித்த முதல் தென் மாநிலத்தவர்கள் என, எங்களுக்கு ஏகப்பட்ட அங்கீகாரங்களும், பெருமைகளும் தேடி வந்தன.

நந்தினி: பொதுவாக வயலின் பக்கவாத்தியமாகத் தான் பயன்படுத்தப்படும். அதனால், வயலினின் தனி சிறப்பு பெரும்பாலும் வெளியே தெரியாது. அதுவே, நாங்கள் இணைந்து வாசிக்கும்போது வயலினின் சிறப்பும் ஓங்கி ஒலிக்கிறது.

இதில், எங்கள் படைப்பாற்றல் முழுமையாக வெளிப்படுவதாக உணர்கிறோம். சேர்ந்து வாசிப்பதில் எங்களுக்குள் உள்ள இணக்கத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது; அது ஒரு விதமான புரிதல். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்தாலும், இசை துறையில் சாதிக்க ஏராளமான இலக்குகள் இருக்கின்றன.

நம் கலாசாரம், பல நுாற்றாண்டுகளை கடந்து வாழ வேண்டுமானால், கர்நாடக இசையை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கிராமங்கள் முதல் வெளிநாடுகள் வரை இசையை பரப்புவதே எங்கள் லட்சியம்.

கலை என்பது, பத்தில் ஒருவருக்கு மட்டும் வாய்க்கும் வரம். பலரும், தங்கள் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு வந்து விட்டாலே படிப்பை காரணம் காட்டி, இசை பயிற்சியை நிறுத்தி விடுகின்றனர்.

கல்வியுடன், கலையையும் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தொடர் பயிற்சியும், அர்ப்பணிப்பும் இருந்தால், நிச்சயம் சிகரத்தை அடையலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us