/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என் போராட்டம் ஒரு தலைமுறை மாற்றமாகியுள்ளது!
/
என் போராட்டம் ஒரு தலைமுறை மாற்றமாகியுள்ளது!
PUBLISHED ON : ஜன 31, 2025 12:00 AM

விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் ஏரிக்கரையில் உள்ள, 25 வீடுகள் அடங்கிய இருளர் குடியிருப்பில் வசிப்போர் கொத்தடிமைகளாக இருந்தவர்கள். அவர்களில் இருந்து படித்து, சென்னையில் செவிலியராக பணிபுரியும் சங்கீதா: எங்க அப்பா, தாத்தா வாங்கிய கடனுக்காக சிறுவயதிலேயே செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணிபுரிந்தார்.
வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று, 15 ஆண்டுகள் உழைத்தும், கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து அப்பாவால் விடுபட முடியவில்லை. திருமணம் முடிந்ததும், அவருடன் சேர்ந்து அம்மாவுக்கும் கொத்தடிமை வாழ்க்கை துவங்கியது.
இந்த சூழலில்தான் நான் பிறந்தேன். என்னையும் கொத்தடிமை ஆக்கிருவாங்கன்னு பயந்து, பாட்டி, என்னை வீரணாமூருக்கு துாக்கி வந்து விட்டார்.
நான் பிறந்த ஏழு ஆண்டில், கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
அதில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது; அவர்களும் வீரணாமூருக்கே வந்துட்டாங்க.
எங்கள் குடியிருப்பு, 17 ஆண்டிற்கு முன் அடிப்படை வசதிகளே இல்லாமல் இருந்தது. பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால், பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள்.
ஆண்களும், சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் சென்று விடுவர். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை. அப்பாவும், 'நீ படி; நான் 'சப்போர்ட்' பண்றேன்'னு சொன்னார். பிளஸ் 2 முடித்தேன்.
நர்சிங் படிக்க ஆசைப்பட்டேன். அரசு கல்லுாரியில் சேர வேண்டும் எனில், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லலை.
காலதாமமாக சென்றதால், 'கவுன்சிலிங் முடிஞ்சிருச்சு; அடுத்த ஆண்டு வாங்க'ன்னு சொல்லிட்டாங்க.
அப்போதுதான், பழங்குடி மக்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்களை சந்தித்து உதவி கேட்டேன். தனியார் நர்சிங் கல்லுாரியில் என்னை சேர்த்து விட்டனர்.
சலுகை கட்டணத்தில் படித்து முடித்து, சென்னையில் தனியார் மருத்துவக் கல்லுாரி ஒன்றில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தேன்.
அடுத்து, என் தங்கையை கல்லுாரியில் சேர்த்தேன். படிப்பை நிறுத்தியிருந்த என் இரண்டாவது தங்கையை மீண்டும் பள்ளி செல்ல வைத்தேன். எங்களை பார்த்து, எங்கள் இன மக்களின் மனதும் மாற ஆரம்பித்தது.
பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கின்றனர். 'சாப்பாடு இல்லாமல் கூட இருக்கலாம்; ஆனால், படிப்பு முக்கியமாக வேண்டும்' என, சொல்கின்றனர்.
என் ஒருத்தியின் போராட்டம், இன்று ஒரு இனத்தோட தலைமுறை மாற்றமாக மாறத் துவங்கியிருக்கிறது.

