/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என் மனைவி தான் எங்கள் வீட்டின் நிரந்தர நிதியமைச்சர்!
/
என் மனைவி தான் எங்கள் வீட்டின் நிரந்தர நிதியமைச்சர்!
என் மனைவி தான் எங்கள் வீட்டின் நிரந்தர நிதியமைச்சர்!
என் மனைவி தான் எங்கள் வீட்டின் நிரந்தர நிதியமைச்சர்!
PUBLISHED ON : டிச 29, 2025 12:43 AM

சிக்கனம், சேமிப்பின் அவசியம் குறித்து கூறும் சென்னையைச் சேர்ந்த வி.சி.கிருஷ்ணரத்னம்:
எனக்கு, 1991ல் திருமணம் முடிந்தது; மனைவி பெயர் கீதா. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பர். ஆணோ, பெண்ணோ, அவருக்கு துணை அமைவது இறைவன் கொடுக்கும் வரமோ, இயற்கையாக அமையும் வரமோ, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; எனக்கு, என் மனைவி வரம் தான்.
நான் தனியார் நிறுவனம் ஒன்றில், மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தேன். ஆனால், குறைந்த வருமானத்தில் எப்படி குடும்பம் நடத்துவது என்று ஒருநாளும் மனைவி சலித்துக் கொண்டதில்லை. இருப்பதை கொண்டு, நிறைவான வாழ்க்கையை அமைத்துக் காட்டினார்.
'பணத்தை நிர்வகிப்பதில் மட்டுமல்ல, சம்பாதிப்பதிலும் நான் திறமைசாலி' என, நிரூபித்து காட்டினார். அஞ்சலக மகளிர் சேமிப்பு முகவராக பணியாற்ற துவங்கி, பலரை அஞ்சலக வைப்பு கணக்கில் சேர்க்க முனைப்புடன் செயல்பட்டார். அதன் வாயிலாக, சிறிது வருமானம் வந்தது.
என் சம்பளத்தையும், அவருடைய வருமானத்தையும் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தி, பணத்தை சேமித்து, மகளை சிறந்த பள்ளியில் படிக்க வைத்தோம். பின், மகள் விரும்பிய கல்லுாரியில் சேர்த்து படிக்க வைத்தோம்.
'எந்த நிலையிலும் கடன் வாங்கக் கூடாது, ஊதாரித்தனமாக செலவு செய்யக்கூடாது' என, என்னை உறுதியுடன் வழிநடத்தினார். பிறரை பார்த்து, தன் வாழ்க்கையை வாழ்வோர் தான், பெரும்பாலும் கடனில் சிக்கி கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் வருமானம், வாழ்க்கை முறை என்பது தனித்துவமானது.
அவரவர் வருமானத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால், கடனில் சிக்கி நிம்மதியை இழக்க வேண்டி இருக்காது. இந்த விஷயங்களை எல்லாம் எனக்கு புரிய வைத்து, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பாதை அமைத்து தந்தார், என் மனைவி.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது, எவ்வளவு வருமானம் வருகிறது என்பதில் மட்டுமே இல்லை. வரும் வருமானத்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
இப்போது கல்லுாரி படிப்பு முடித்து, மகளுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. மகளை உயர்ந்த பொறுப்புக்கு கொண்டு வரக் காரணம், என் மனைவியின் பண நிர்வாகம் தான்.
கண்டபடி செலவு செய்யும் குணம் இருந்தால், கோடீஸ்வரர் என்றாலும் கூட நிம்மதி இருக்காது. சம்பளம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்ட பண நிர்வாகம் இருந்து விட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம் என்பது என் அனுபவம்.
எங்களுடைய வாழ்க்கை பயணத்தில், மிகவும் எளிமையாக எனக்கு நிதி மேலாண்மையை கற்று தந்து, அன்று முதல் இன்று வரை எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் என் மனைவி தான், எங்கள் வீட்டின் நிரந்தர நிதியமைச்சர்.

