/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
24 மணி நேரமும் வெளிச்சமிருக்கும் அன்டார்டிகா!
/
24 மணி நேரமும் வெளிச்சமிருக்கும் அன்டார்டிகா!
PUBLISHED ON : டிச 19, 2025 03:10 AM

தனது குளிர் பிரதேச சாகச பயண அனுபவங்களை கூறும், சென்னையைச் சேர்ந்த, 65 வயதான கி.வெங்கடேசன்: நான், நண்பர்களான ராஜு மற்றும் சந்திரசேகரன் என, மூவரும் ஒரே மாதிரியாக சிந்திக்கும் சென்னை நண்பர்கள்.
கிட்டத்தட்ட, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் சென்றிருந்தாலும், பூமியின் வட துருவமான ஆர்க்டிக் மற்றும் தென் துருவமான அன்டார்டிகாவை பார்க்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.
முதலில், 2023ல் அன்டார்டிகாவுக்கு கிளம்பினோம். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்த சுற்றுலா பயண குழுவில், நாங்கள் மூவர் மட்டுமே இந்தியர்கள். கிங் ஜார்ஜ் தீவில், ஓடுதளம் இல்லாத அடர்ந்த பனித்தரையில் வித்தியாசமான முறையில் விமானம் தரையிறங்கியதே, புது அனுபவமாக இருந்தது.
எங்களை, 'ஓஷன் அட்வெஞ்சரர்' என்ற கப்பலில் ஏற்றி, பனிக்கடலை நோக்கி அழைத்து சென்றனர்.
எங்கெங்கும் ஒரே பனிப்படலமாக இருந்தது. கடலே வெண் பனியாய் உறைந்து கிடந்ததை கண்டு, உடல் சிலிர்த்தது. நல்லவேளையாக, பல அடுக்கு கவச ஆடைகள் அணிந்திருந்தோம்.
அங்கு, 24 மணி நேரமும் வெளிச்சமிருந்தாலும், பகல் மற்றும் இரவு என, பிரித்து கொண்டு, இரவில் கப்பலில் ஓய்வெடுத்தும், மீதி நேரங்களில் அன்டார்டிகாவின் பல பகுதிகளுக்கு கப்பலிலும், நடந்தும் சென்றும் பார்வையிட்டோம்.
பனி மலையின் துாய்மை, ஆயிரக்கணக்கான பென்குயின் பறவைகள் என, எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்த்தது ரம்யமாய் இருந்தது. அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கண்டம் என்பதால், பல நாடுகள் அங்கு ஆராய்ச்சி நிலையங்களை அமைத்திருக்கின்றன.
இந்தியா சார்பாக, தட்சின் கங்கோத்ரி, மைத்ரி என்ற நிலையங்கள் உள்ளன. நடப்பாண்டு ஜூலையில், வடதுருவமான ஆர்க்டிக்கிற்கு விமானம் மூலம் சென்றோம்.
அங்கே இருந்து ஆடம்பர கப்பல் வாயிலாக, ஸ்வால்பார்ட் தீவுகளை அடைந்தோம். நாங்கள் இறங்கிய இடத்தில், பனிக் கரடிகள் நிறைய இருந்தன. இதனால், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், எங்களை கப்பலை விட்டு இறக்கி, அழைத்து சென்றனர்.
அங்கு மட்டுமே வாழும், 'ரீன்டியர்' என்ற மான்கள், 'ஸ்னோ பாக்ஸ்' எனப்படும் நரிகள் என, எல்லாவற்றையும் பார்க்க பார்க்க அத்தனை இன்பமாக இருந்தது.
ஆர்க்டிக் பயணத்தில் நாங்கள் மூவரும் ஒரு விசேஷமான இடத்திற்கு சென்றோம். உலகம் முழுக்க உள்ள விதைகள், ஒரே இடத்தில் பாதுகாக்கப்படும் களஞ்சியம் தான் அது. எதிர்கால மனித குலத்துக்கான பாதுகாப்பு பெட்டகமான அந்த இடத்தில் நின்றபோது, அவ்வளவு பெருமிதமாக இருந்தது.
மேற்கண்ட இரு பயணங்களிலும், எங்கள் கப்பலில் இந்திய சமையல்காரர் இருந்ததால், எங்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை சமைத்து கொடுத்து அசத்தினார்.

