/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும்!
/
கல்வி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றும்!
PUBLISHED ON : டிச 20, 2025 01:01 AM

தனியார் நிறுவனத்தில் கணக்கு அதிகாரியாக பணிபுரியும், கோவையைச் சேர்ந்த 22 வயதான ஆனந்தமேரி:
திருச்சிக்கு பக்கத்தில் உள்ள கல்பாளையம் தான் என் சொந்த ஊர். நானும், தம்பியும் குழந்தைகளாக இருக்கும் போதே, அப்பா இறந்துவிட்டார். இதனால், அம்மாவுக்கு மனதளவில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில், எங்களை கவனிக்க முடியாமல், திருச்சியில் உள்ள, 'நட்பு சிறார் இல்லத்தில்' உறவினர்கள் சேர்த்து விட்டனர்.
என் மூன்றரை வயது முதல், நானும், தம்பியும் அங்கு தான் வளர்ந்தோம்; அரசுப் பள்ளியில் தான் படித்தோம். சிறு வயதில் எதுவுமே கிடைக்காத ஏக்கம், என்னை துரத்தியபடி இருந்தது. ஆனாலும், அழுகையும், விரக்தியும் என் படிப்பை பாதிக்காமல் பார்த்துக் கொண்டேன். படித்தால் அனைத்தையும் மாற்ற முடியும் என நம்பினேன்; அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
கல்லுாரி கட்டணம் கட்ட முடியாத சூழலில், ஒருவர் உதவியுடன், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்தேன். அடுத்து, கோவை அரசு கலைக் கல்லுாரியில், எம்.காம்., - சி.ஏ., படித்து முடித்தேன். ஓராண்டுக்கு முன், கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில், கணக்கு அதிகாரி வேலை கிடைத்தது. அம்மா இருந்தும், அவர் எங்களுடன் இல்லாத வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இத்தனை ஆண்டுகளாக நல்ல உடை, சாப்பாடு, படிப்பு என, அனைத்திற்கும் யாரையோ எதிர்பார்த்து, கிடைத்ததை ஏற்று வாழ்ந்த அந்த வாழ்க்கைக்கு முடிவு வந்தது. இனி, எனக்கு தேவையான அனைத்தையும் நானே வாங்கிக் கொள்ள முடியும்; பிடித்ததை செய்யலாம்.
அனைத்தையும் விட, அவமானங்களை மட்டுமே பார்த்து வாழ்ந்த எங்கள் அம்மாவை நிம்மதியாக பார்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம், கடந்து வந்த அனைத்து வலிகளையும் மறக்க செய்தது.
ஆசிரியை ஆக வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக பி.எட்., படித்து வருகிறேன். என் வேலையும், சம்பளமும் எனக்கு பணம், பொருளை கொடுப்பதை விட, தன்னம்பிக்கை, தைரியம், சுயமரியாதையை நிறைய கொடுத்துள்ளது.
சொந்தக்காலில் நிற்கும் போது கிடைக்கும் அந்த உணர்வு, வேறு எதிலும் கிடைக்காது. இயலாமைக்கு, உங்கள் சூழலை ஒருபோதும் காரணம் சொல்லக் கூடாது. எந்த சூழல் வந்தாலும், படிப்பை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
என் அம்மாவை, 'மனநிலை சரியில்லாதவர்' என, ஊருக்குள் சிலர் பேசினர். ஆனால், நான் இன்று பார்க்கும் வேலையும், என் படிப்பும் தான், அம்மாவின் அடையாளத்தை மாற்றியுள்ளது.

