/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் லாபம்
/
தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் லாபம்
PUBLISHED ON : டிச 21, 2025 07:05 AM

தேனீக்கள் வளர்ப்பு தொழிலில் படு சுறுசுறுப்பாக இருக்கும், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடியைச் சேர்ந்த, 36 வயதாகும் ஜூவைரிய்யா பாத்திமா: நானும், என் கணவர் ஈசாக்கும், 10 ஆண்டுகளுக்கு முன், 'துரித உணவகம்' ஒன்றை நடத்தி வந்தோம். அதில் கைநிறைய லாபம் பார்த்தோம். துரித உணவுகள் நல்லதல்ல என்பதை உணர்ந்து, அதை கைவிட்டோம்.
பின், 'டி.ஆர்., இயற்கை தேனீ பண்ணை' என்ற பெயரில் தேனீக்கள் வளர்ப்பில் இறங்கினோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. தேனீக்கள் எங்கள் வாழ்க்கையை
இனிப்பாக மாற்றின.
மலை தேனீ, கொம்பு தேனீ, இந்திய தேனீ, இத்தாலிய தேனீ, கொசு தேனீ என, ஐந்து வகை தேனீக்கள் உள்ளன. இருட்டில் வாழும் இத்தாலிய தேனீக்கள், மற்ற தேனீக்களை விட, அதிக அளவு தேனை சுமந்து வரும் ஆற்றல் கொண்டவை.
தேனீ வளர்ப்பு, தேன் சேகரிப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு, இத்தாலிய தேனீ வளர்ப்பு தான் அதிக லாபம் தரும்.
தேனீ வளர்க்கக் கூடிய ஒரு பெட்டியில், 40,000 முதல், ஒரு லட்சம் வரை தேனீக்கள் இருக்கும். ராணி தேனீ ஒன்று, ஆண் தேனீ சில நுாறுகள் இருக்கும்; மற்றவையெல்லாம் வேலைக்கார தேனீக்கள்.
ராணி தேனீக்கு, 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆயுள்; ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்களின் ஆயுள், 60 நாட்கள் மட்டுமே.காடுகள், தோப்புகள், விளைநிலங்கள், தோட்டங்களில் இருக்கும் பூக்களில் இருந்து தேனை உறிஞ்சி வரும் பொறுப்பை, வேலைக்கார தேனீக்கள் ஏற்கின்றன.
சூரியகாந்தி, எள்ளுப்பூ, முருங்கைப்பூ, பாகற்பூ, புளியம்பூ, வேப்பம்பூ, கொய்யாப்பூ, மாம்பூ, தென்னை, சப்போட்டா போன்றவற்றில் தேன் அதிகம் இருக்கும். எனவே, தென்னந்தோப்பு, மாந்தோப்பு, விவசாய பயிர்கள் வளரும் இடங்களில், தேனீக்கள் வளர்ப்பு பெட்டி வைப்பது சிறந்தது.
ஒரு பெட்டிக்கும், மறு பெட்டிக்கும் இடைவெளி விட்டு, 15 அல்லது 20 பெட்டிகள் வரை வைக்கலாம்.
தேன் அடைகளை, தேன் பிரித்தெடுக்கும் கருவியில் போட்டு விட்டால் தேனும், அடைகளும் தனித்தனியாக வெளியேறும். பின், தேன் அடைகளை மீண்டும் பெட்டிக்குள் வைத்து பயன்படுத்தலாம்.
தேன் விற்பனை போன்று, தேன் மெழுகிலும் நல்ல லாபம் கிடைக்கிறது. ஆண்டுக்கு, 300 முதல் 500 கிலோ வரை விற்பனை செய்கிறோம். தேன் மெழுகு விற்பனையில், ஆண்டுக்கு, 3.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
அதேபோல், ஆண்டுக்கு, 6,000 கிலோ தேன் விற்பனை செய்கிறோம். ஒரு கிலோ தேனை, 400 ரூபாய் வீதம் விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு, 24 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
செலவுகள் எல்லாம் போக, 12 முதல், 14 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு:
99940 87710

