/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அறிகுறிகளால் நோய்களை கண்டறியலாம்!
/
அறிகுறிகளால் நோய்களை கண்டறியலாம்!
PUBLISHED ON : ஜூலை 28, 2019 12:00 AM

அறிகுறிகளால் நோய்களை கண்டறியலாம்!
நோய் பாதிப்புகளை அறிவிக்கும், அறிகுறிகள் குறித்து கூறும், பொது மருத்துவர், விஷால்: நோய்களை அடையாளம் காட்டும் கண்ணாடி, அறிகுறி. சாதாரண சளித் தொந்தரவில் துவங்கி, புற்று நோய் வரை, பல்வேறு நோய்களுக்கான அறிகுறி, பசியின்மை. எனவே, எந்த நிலையிலும் இதை அலட்சியப்படுத்தக் கூடாது. பொதுவாக, இரைப்பையின் உட்சுவர்களில் அழற்சி உண்டாவதற்கான அறிகுறியாக, பசியின்மை இருக்கும். தைராய்டு, காச நோய் போன்ற பாதிப்புகளுக்கும், இது ஓர் அறிகுறி.காது, சருமம் ஆகியவற்றில் நோய் தொற்று ஏற்பட்டாலோ, சளி அதிகமானாலோ, தாடை வீங்கத் துவங்கும். தாடை எலும்புகளுக்கு கீழும், தொண்டையின் மேற்புறத்திலும் காணப்படும் நிணநீர்க் கணுக்களின் வீக்கமே, அந்த அறிகுறி. ஏதேனும் நோய் தொற்று உடலைத் தாக்க முயன்றால், அதைத் தடுக்கும் வேலைகளை, இவை செய்யும். இறந்த செல்களும், நோய் தொற்றுக்கு காரணமான பாக்டீரியாவும் அந்தப் பகுதியில் சென்று தேங்குவதால், தாடையின் கீழ்ப்பகுதியில் வீக்கம் ஏற்படும்.ஆனால், நாள் முழுவதும் சோர்வாக இருப்பது, சிறிய செயல்களை செய்தால் கூட, சோர்வு ஏற்படுவது போன்றவை, உடல்நிலை பாதிக்கப்படப் போவதை முன்னரே உணர்த்தும் அறிகுறி. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, காச நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கான அறிகுறியாகவும், சோர்வு இருக்கலாம். ஓரிரு நாட்களுக்கு மேல் சோர்வு நீடித்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். உயர் ரத்த அழுத்தம், மூளையில் கட்டி, மூளை ரத்தக் குழாய்களில் கசிவு போன்ற பிரச்னைகளின் துவக்க நிலையில், தீராத தலைவலி இருக்கும். சாதாரண தலைவலி, சில மணி நேரத்தில் குணமாகி விடும். தொடர்ந்து நீடித்தால், காரணத்தை கண்டறிய வேண்டும்.மாதக் கணக்கில் தொடர் இருமல் இருந்தால், நுரையீரலில் அழற்சி ஏற்படுத்தும் நிமோனியா, காச நோய் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். 'இன்ப்ளூயென்ஸா' எனப்படும் சளிக் காய்ச்சல் அல்லது 'ப்ளூ காய்ச்சல்' ஏற்படுவதன், பொதுவான அறிகுறி, உடல்வலி. அப்போது உடல், உற்பத்தி செய்யும், கரிம நைட்ரஜன் சேர்மமும், புரதமும், தசைகளில் வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, கணினியில் வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலியும், உட்கார்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு முதுகு வலியும் ஏற்படலாம்.உடலில் நுழைந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளைக் கொல்ல, உடல் தொடுக்கும் யுத்தமே, காய்ச்சல். சூட்டைத் தணிக்க, மருந்து எடுத்துக் கொள்வதை விட, காய்ச்சலுக்கான காரணம் அறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கிராமிய பொருளாதார சிந்தனை தேவை!
கைத்தறி ஆடைகளை தயாரித்து, 'நுாற்பு' என்ற பெயரில், விற்பனை செய்து வரும், சிவகுருநாதன்: கைத்தறி இன்று, வழக்கொழிந்து உள்ளது. இளைய தலைமுறையினர் எவரும், நெசவுத் தொழிலுக்கு வருவதில்லை. நெசவாளக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, இயல்பிலேயே, அதன் மேல் ஆர்வம் இருந்தது. கைத்தறி நெசவு மூலம், ஆடை உற்பத்தி செய்து விற்க, முடிவு செய்தேன்.நெசவு சார்ந்த தேடலில் இறங்கியபோது, கர்நாடக மாநிலம், மேல்கோட்டையில், 'ஜனப்புடா சேவா' என்ற அமைப்பினருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களிடம் என் திட்டத்தை பற்றி கூறியதும், ஊக்கம் அளித்தனர். ஐ.டி., வேலையை விட்டு கிராமத்துக்கு வருவது, 'பேஷன்' ஆகவே மாறிவிட்டது. ஆனால் நான், நுாற்பு துவங்குவதற்கான, முன் தயாரிப்புகளை எல்லாம் செய்த பிறகே, வேலையை விட்டேன்.கடந்த, 2016 அக்., 2ல், 'நுாற்பு' நிறுவனத்தை துவங்கினேன். சென்னிமலை அருகே, 1,010 நெசவாளர் காலனி உள்ளது. அங்குள்ள ஆறு நெசவாள குடும்பத்தினர், பகுதி நேரமாக நெய்து தர சம்மதித்தனர். அதேபோல், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் ஒரு குடும்பத்தாரும் ஒத்துக் கொண்டனர்.உற்பத்திக்கான ஏற்பாட்டை செய்தவுடன், சந்தைப்படுத்துதலுக்கான முயற்சியில் இறங்கினேன். - 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக, நுாற்பு ஆடைகள் பற்றிய விளம்பரத்தை செய்தேன். பலர் தொடர்பு கொண்டு, 'ஆர்டர்' கொடுத்தனர். அதுமட்டுமின்றி, கண்காட்சிகளில் கடை போட்டும், விற்பனை செய்து வருகிறேன்.இப்போது மக்களிடம், கைத்தறி நெசவு மேலான ஈடுபாடு அதிகரித்துள்ளது. நம் பணம், ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு போகாமல், நெசவாளிக்கு போவதில், மக்களுக்கு மனநிறைவு கிடைக்கிறது. இதனால், நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான உற்பத்தியை மட்டும் செய்து வருகிறோம்.சென்னிமலை, கவுந்தப்பாடி நெசவாளர்களை வைத்து, இந்த உற்பத்தியை செய்வது போல், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும். அதை எடுத்து நடத்த, புரிதல் உள்ள இளைஞர்கள், முன்வர வேண்டும். அதற்காக, நெசவுத் தொழிலை கற்பிக்கும் மையத்தை அமைக்கும் முயற்சியில் உள்ளேன்.மனிதர்களின் அதீத நுகர்வு கலாசாரம் தான், சூழலை சீர்குலைக்கிறது. இன்று நாம் சந்தித்து வரும் பல பிரச்னைகளுக்கும், அது தான் காரணம். இன்று, கிராமியப் பொருளாதாரம் பற்றி, சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. என் பணியும், அதற்கான சின்ன முன்னெடுப்பு தான்.

