/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அகத்தி கீரையில் 'கால்சியம்' அதிகம்!
/
அகத்தி கீரையில் 'கால்சியம்' அதிகம்!
PUBLISHED ON : நவ 20, 2019 12:00 AM

அகத்திக் கீரையின் அற்புத பலன்களை கூறும், இயற்கை மருத்துவர், 'அல்மா' வேலாயுதம்: சரியாக பசி எடுக்கவில்லையா; வாந்தி எடுப்பது போல தோன்றுகிறதா; கொஞ்சம் சாப்பிட்டதும், வயிறு நிறைந்தது போல உணர்கிறீர்களா...
உங்களுக்கு கால்சியம் பற்றாக்குறை இருக்கிறது என அர்த்தம்.ஒரு கைப்பிடிஅகத்திக்கீரையில், 10 டம்ளர்பாலில் உள்ள கால்சியம் சத்து உள்ளது. இது, அரை கிலோ ஆட்டு இறைச்சி, 20 முட்டைகளில் கிடைக்கும் கால்சியத்திற்கு இணையானது.அதற்காக, சத்தான கீரை என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது; மாதத்திற்கு ஒன்றிரண்டு முறை தான் சாப்பிட வேண்டும். நிறைய சாப்பிட்டால், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விடும்.'வெந்து கெட்டது முருங்கை; வேகாமல் கெட்டது அகத்தி' என்பர். எனவே, அகத்திக் கீரையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்; இரவில் சாப்பிடக் கூடாது. பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது, இந்தக் கீரையை சாப்பிடக் கூடாது. இதில், கூட்டு, பொரியல், சாம்பார், சாதப்பொடி என, விதவிதமாக சமைக்கலாம். அகத்திப் பூவை சமைத்து உண்டால், உடலில் உள்ள விஷத்தன்மை மறையும். தசைகள் இயக்கம் சீர்பெறும்; இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சீராகும்; இதயம் பலம் பெறும்.ஒரு கட்டு அகத்திக்கீரையை காய வைத்தது, தலா, 20 கிராம் மிளகு, சீரகம், 100 கிராம் உளுந்து, மிளகாய் 7, தேவையான அளவு உப்பு என, அனைத்தையும் பொடி செய்து, நெய்யுடன் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.அகத்திக் கீரையால், அழகும் பெறலாம். இந்த கீரையை, தேங்காய் பால் சேர்த்து அரைத்து, கண்ணுக்குக் கீழே பூசி வந்தால், கருவளையம் மறையும்; முகம் அழகாகும்.அகத்தின் தீயை தணிப்பதால், அகத்தி என, இது அழைக்கப்படுகிறது. சிற்றகத்தி, சாழை அகத்தி, சீமை அகத்தி, பேய் அகத்தி போன்ற பல வகைகள் உள்ளன. சாழை அகத்தியைத் தான், உணவாக பயன்படுத்துகிறோம். அகத்தி இலைச்சாறு, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். அகத்திப்பூ, கண் எரிச்சல், தலை சுற்றல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போதல் போன்றவற்றை சரி செய்யும். அகத்திப் பட்டையை, கஷாயம் வைத்து அருந்தினால், காய்ச்சலின் தீவிரம் குறையும். அகத்தி வேரை அரைத்து பூசி வர, கால் மூட்டு வலி குணமாகும்.அகத்திக்கீரை சூப், வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. அகத்திக் கீரையுடன், நான்கில் ஒரு பங்கு சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நன்றாக வேக வைத்து, சூப் தயாரித்து, தினமும் ஒரு வேளை அருந்தி வர, வயிற்றுப்புண் ஆறும்!