PUBLISHED ON : செப் 09, 2011 12:00 AM

'லாபகரமான தொழில்!' புடவை, 'டிரை வாஷ்' தொழிலில், சாதித்துள்ள இந்திரலட்சுமி: சிறு வயது முதல், 'துறு துறு' என, ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பேன்.
பி.எஸ்சி., முடித்ததும், திருமணம், குழந்தைகள் என, வாழ்க்கை சுவாரஸ்யமாக சென்றது. ஆனால், வீட்டில் சும்மா இருக்க விருப்பமில்லை. புடவை, 'டிரை வாஷ்' செய்யும் என் தோழியிடம், பொழுதுபோக்காக கற்றுக் கொண்டேன். வீட்டிலிருந்த என் புடவைகளுக்கு கஞ்சி போட்டு, 'டிரை வாஷ்' செய்றதுனு பொழுதுகளை ஓட்டினேன். இதையே தொழிலாக செய்தால், நிச்சயம் சாதிக்கலாம் என, தோழி நம்பிக்கையூட்ட, ஆர்வமுடன் தொழிலில் இறங்கினேன். ஆரம்பத்தில், என் குடும்பத்தார், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தாலும், என் கணவர், எனக்கு ஆதரவாக இருந்து, உற்சாகம் தந்தார். கடை ஆரம்பித்த போது, வாய்மொழியாகப் பேசித் தான் விளம்பரம் செய்தேன். சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே டெலிவரி, திருப்திகரமான செயல் என, நற்பெயர் பெற்றேன். இதனால், அடுத்தடுத்து ஆர்டர்கள் கிடைத்தன. பாந்தினி சாரி, டிசைனர் சாரி, சில்க் காட்டன், ரா சில்க்னு மார்க்கெட்டிற்கு புதிதாக வரும் புடவை ரகங்களுக்கு ஏற்ப தொழிலை புதுப்பித்தேன். அந்த அக்கறைக்கும், உழைப்பிற்கும் பரிசாத்தான், இப்போது ஏழு பணியாளர்களுடன், சீசனைப் பொறுத்து, மாதம், 25 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை, லாபம் பார்க்கும் அளவிற்கு, தொழிலை நிலைப்படுத்தி இருக்கேன். இந்த தொழிலுக்கு ஆரம்ப கட்ட முதலீடாக, 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். தொடக்க மாதங்களில் சில ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். தொழில் சீரான பின், போட்ட முதலை விட, மாத லாபத்திற்கு குறைவிருக்காது. 'டிரை வாஷ்' தொழிலுக்கு வகுப்பு எடுப்பது, என் அடுத்த கட்ட விருப்பம். இன்னும் நிறைய பெண்கள், இந்த தொழிலுக்கு வரவேண்டும்.

