தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சமையலறை கழிவிலிருந்து 'பயோகேஸ்!'

சமையலறை கழிவிலிருந்து 'பயோகேஸ்!'

சமையலறை கழிவிலிருந்து 'பயோகேஸ்!'


PUBLISHED ON : டிச 08, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2013 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு மானியத்துடன், 'பயோகேஸ்' தயாரிக்கும் கருவியை, குறைந்த விலையில், கிராமங்களில் நிறுவி வரும், ராமகிருஷ்ணன்: நான், கன்னியாகுமரியில் உள்ள, 'விவேகானந்தா கேந்திரம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், பொறியாளராக உள்ளேன். சமையல் எரிவாயு விலை உயர்வு, சிலிண்டருக்கான மானியமும் குறைக்கப்பட்டதால், ஏழைகளின் குடும்ப செலவும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க, சமையலறை கழிவுகளில் இருந்து, 'பயோகேஸ்' தயாரிக்கும் முறையை, பொதுமக்களுக்கு இலவசமாக கற்று தந்தோம். பின், விவேகானந்தா கேந்திரம் உதவியுடன், குறைந்த செலவில், அரசு மானியத்துடன், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, 'பயோகேஸ் பிளான்ட்' அமைத்து தருகிறோம்.ஒரு கன மீட்டர், 'கேஸ் பிளான்ட்' அமைக்க, 19 ஆயிரம் ரூபாய் செலவாகும். மத்திய அரசு, 4,000 ரூபாய் மானியம் தருகிறது. 1 கன மீட்டர் கேஸ் என்பது, ஒரு நாள் உற்பத்தியாகும் எரிவாயுவின் அளவு.இது, 400 கிராம் எடையுள்ள, எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு இணையானது. 1 கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்ய, 3 முதல், 5 கிலோ, மக்கும் கழிவுகள் தேவைப்படும். கெட்டுப் போன உணவுகள், அழுகிய காய்கறி, கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகளை பயன்படுத்தலாம்.காய்கறி கழிவுகளை நன்கு கரைத்து, குளிர்ந்த நிலையில் தான், சின்டெக்ஸ் பைபர் கன்டெய்னரில் ஊற்ற வேண்டும். அப்போது தான், அது எளிதில் நொதித்து, மீத்தேன் வாயு வெளிவந்து, விரைவாக, 'பயோகேஸ்' உற்பத்தியாகும்.பின், 'ஆர்கானிக் பெர்டிலைசர் வாட்டர்' என்ற தண்ணீரும் வெளியேறும். இத்தண்ணீரில், செடிகளுக்கு தேவையான எல்லா நுண்ணுாட்ட சத்தும் உள்ளது. எல்.பி.ஜி., வாயுவிற்கு, காற்றை விட அடர்த்தி அதிகம். அதனால், நீண்ட நேரம் காஸ் கசிவு ஏற்பட்டால், சமையல் அறையிலேயே காஸ் தங்கி விடும்.அப்போது, 'ஸ்டவ்'வை பற்ற வைத்தால், சில நேரங்களில் தேவையற்ற தீ விபத்து ஏற்படும். ஆனால், 'பயோகேசின்' எடை, சற்று லேசானது. இதனால், காஸ் கசிந்தாலும், சீக்கிரம் வெளியேறி விடும். எனவே, தீ விபத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தொடர்புக்கு: 04652-246296.

தமிழகத்தின்'ஸ்டிராங் உமன்!'

கடந்த, 15 ஆண்டுகளாக, இருபாலருக்குமான உடற்பயிற்சி மையத்தை, சமூக நலப்பணியாக நடத்தி வரும், உமா மகேஸ்வரி: நான், கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவள். பள்ளி, கல்லுாரியில் படிக்கும் போதே, தடகளம் மற்றும் பளு தூக்கும் போட்டிகளில், பல பரிசுகள் பெற்றேன். இதனால், ஆரம்பம் முதலே, உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இருந்தது. திருமணத்திற்கு பின்பும், கணவர் தந்த ஊக்கத்தால், பளு தூக்குதலில், பல சாதனைகள் செய்ய முடிந்தது. 1993ல், தமிழக அளவில், 'தி ஸ்டிராங் வுமன்' என்ற பட்டத்தையும், 1997ல், இதே பட்டத்தை, சர்வதேச அளவிலும் பெற்றேன்.இச்சாதனைக்காக, தமிழக காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், அந்த வாய்ப்பை தவிர்த்தேன். ஏனெனில், ஆண்கள் மட்டுமே பயிற்சி தந்து வரும் மல்யுத்தத்தில், இருபாலரையும் வீரர்களாக உருவாக்கி சாதனை படைப்பதை, என் லட்சியமாக கருதினேன்.அதனால், 15 ஆண்டுகளுக்கு முன், 'மசில்ஸ் அண்ட் பிட்னஸ் சென்டர்' என்ற, 'ஜிம்' மையத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், உடற்பயிற்சிக்கு ஆண்கள் வர தயக்கம் காட்டினர். 'ஒரு பெண்ணால் நமக்கு என்ன பயிற்சி தர முடியும்' என்ற சந்தேகம், அவர்களிடம் இருந்தது.நான், அதை பற்றி கவலைப்படாமல், என் பாதையில் ஒரு வலுவான சாதனை களத்தை அமைக்க துவங்கினேன். கடுமையான பயிற்சிகளை, முறையாக கற்று தந்ததன் மூலம், பல வீரர், வீராங்கனைகளை உருவாக்கினேன்.அதனால், இன்று என் பயிற்சி கூடம் முழுவதும், இளைஞர் பட்டாளமாக இருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில், தேசிய அளவில் நடைபெற்ற, 40 வயது பிரிவினருக்கான பளு தூக்கும் போட்டியில், 'சீனியர் மற்றும் மாஸ்டர்' போட்டிகளில் தங்கம் வென்று, முதலிடத்தை கைப்பற்றினேன்.பெண்கள், அதிக எடை தூக்கி பயிற்சி செய்தால், கர்ப்பப்பை இறங்கி விடுவதுடன், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது, தவறான கருத்து. ஏனெனில், திருமணமாகி குழந்தைகள் பெற்ற பல பெண்கள், என் முயற்சியால் பளு தூக்கும் வீராங்கனைகளாக சாதித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us