/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த பிசினசுக்கு எந்த கடனும் வாங்கவில்லை!
/
இந்த பிசினசுக்கு எந்த கடனும் வாங்கவில்லை!
PUBLISHED ON : ஜூலை 25, 2025 12:00 AM

கல்லுாரி வேலையை உதறிவிட்டு, சிறுதானிய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த எழில்மதி:
தனியார் கல்லுாரி ஒன்றில் நுாலகராக இருந்தேன். சிறுதானிய உணவுகள் மீது ஈடுபாடு அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறுதானிய உணவுகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து, பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் பேசுவேன்.
சில பெற்றோர், 'நீங்களே சிறுதானிய உணவுகளை செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்குமே' என்றனர். முதன்முதலில் ஒரு, 'பிளே ஸ்கூல்' குழந்தைகளுக்கு சத்து மாவு செய்து கொடுத்தேன்; நல்ல வரவேற்பு இருந்தது.
மதுரை வேளாண் கல்லுாரி உட்பட பல இடங்களில், சிறுதானியம் தொடர்பான மதிப்பு கூட்டல் குறித்து தெரிந்து கொண்டேன். ஆரம்பத்தில், வார இறுதியில் பல சூப்பர் மார்க்கெட்டுகளில், ஸ்டால் போடுவோம்.
வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளை, 'டேஸ்ட்' செய்ய கொடுப்போம். அப்படித்தான் பிசினஸ் மெல்ல வளர்ந்தது.
பகுதி நேரமாக ஆரம்பித்த பிசினசை முழு நேரமாக மாற்ற முடிவு செய்து, வேலையை விட்டு நின்றேன். நானும், தம்பியும் சேர்ந்து, 2018ல், 'மகிழ் புட்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் துவக்கினோம்.
அடுத்து வெந்தயக்களி , உளுந்தங்களி, அடை மாவு, சப்பாத்தி மிக்ஸ், கருப்பு கவுனி சப்பாத்தி மிக்ஸ், காட்டுயானம், பூங்கார், மாப்பிள்ளை சம்பா என, பாரம்பரிய அரிசி வகைகளில் புட்டு மாவு மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், நிலக்கடலையுடன் கூடிய கருப்பு உளுந்து லட்டு, கம்பு லட்டு, வெள்ளை சோளம் மிக்ஸ் என சிறுதானிய உணவு பொருள் தயாரிப்பை விரிவு படுத்தி, இன்று, 50க்கும் மேலான பொருட்களை தயாரிக்கிறோம்.
வீட்டின் ஒரு பகுதியில் செய்யும் பிசினசை, 'மிஷின் செட்டப், தனி புரொடக் ஷன் யூனிட், பிரான்சைஸ் மாடல்' என, விரிவுபடுத்தும் திட்டத்தில் இருக்கிறோம். தவிர, 3 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயமும் செய்கிறோம்.
கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், உளுந்து போன்றவற்றை பயிரிட்டு, எங்கள் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தி கொள்கிறோம். நாங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்கும் சொல்லித்தர, 'ஆன்லைன்' வகுப்புகளும் நடத்துகிறோம்.
தற்போது, தமிழகம் முழுதும் விற்பனை செய்கிறோம். வெறும், 5,000 ரூபாயில் தான் இந்த தொழிலை ஆரம்பித்தோம்.
இதுவரை எங்கள் பிசினசுக்கு நாங்கள் எந்த கடனும் வாங்கவில்லை. தொடர் வாடிக்கையாளர்கள், 1,500 பேர் உள்ளனர். மாதம், 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. செலவெல்லாம் போக, 35,000 ரூபாய் லா பம் கிடைக்கிறது.
தொடர்புக்கு:
88380 83492,
8190871901