/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நச்சு இல்லாத பொருட்களை மக்களுக்கு வழங்கணும்!
/
நச்சு இல்லாத பொருட்களை மக்களுக்கு வழங்கணும்!
PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

கேரள மாநிலத்தின், 2023ம் ஆண்டுக்கான சிறந்த இயற்கை விவசாயி விருது பெற்ற, பாலக்காடு மாவட்டம், பெருமாட்டி ஊராட்சியில் உள்ள ராமர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த, தமிழரான ஞான சரவணன்:
கடந்த மூன்று தலைமுறைகளுக்கு முன், எங்கள் முன்னோர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்துள்ளனர். அதன்பின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் குடியேறி, இங்கு விளை நிலங்கள் வாங்கி, விவசாயம் செய்ய துவங்கினர்.
நான் எம்.ஏ., முடித்து விட்டு, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். நல்ல ஊதியம் கிடைத்தும், அப்பணி எனக்கு மனநிறைவு கொடுக்கவில்லை. காரணம், என் எண்ணம் முழுதும் விவசாயத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது.
அதனால் வேலையை விட்டுட்டு, விவசாயத்தில் இறங்கினேன். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான, 36 ஏக்கரில் தென்னை, தேக்கு, மகோகனி, கொய்யா, பப்பாளி, பாக்கு, காய்கறிகள் விளைவிக்கப்படுவதுடன், நாட்டு மாடுகளும் வைத்திருக்கிறோம்.
இவற்றின் பாலை நெய்யாக மாற்றி, வாரத்திற்கு 250 கிலோ வரை விற்பனை செய்கிறோம்.
விவசாயத்தில் வெற்றி நடை போட ஊடுபயிர் சாகுபடியும், மதிப்பு கூட்டலும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் செய்தால் தான், ஒரு விவசாயியால் உத்தரவாதமான லாபம் பார்க்க முடியும்.
இங்கேயே மரச்செக்கு அமைத்துள்ளோம். தேங்காய்களை கொப்பரையாக மாற்றி, மரச்செக்கில் ஆட்டி எண்ணெய் தயார் செய்து விற்பனை செய்கிறோம். கொய்யா இலைகளை முதன்மை மூலப்பொருளாக பயன்படுத்தி, டீ துாள் தயார் செய்கிறோம்.
கொய்யா பழத்தை இயற்கை முறையில் பதப்படுத்தி, பவுடர் தயார் செய்கிறோம். 'நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொய்யா பவுடர் சிறந்த மருந்து' என, சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இயற்கை விவசாயம் செய்யும் மற்ற விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து, அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறோம். எங்களுக்கு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்கிறோம். பாலக்காடு மற்றும் சுற்று வட்டார மக்கள் நேரில் வந்து, பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக, இப்பண்ணையில் ஒரு அங்காடி நடத்துகிறோம்.
பண்ணையை வெற்றிகரமாக நடத்துவதற்கும், எங்கள் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கும், இந்த வருமானம் போதுமானதாக இருக்கிறது.
இப்பண்ணையின் வாயிலாக அதிக லாபம் பார்ப்பது எங்களது நோக்கமல்ல... ரசாயன நச்சு இல்லாத, ஆரோக்கியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் முதன்மையான நோக்கம்.
தொடர்புக்கு
99626 88000

