PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

அமெரிக்காவின் நியூயார்க்கில், 'செம' என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் நடத்தி வரும், 'செப்' விஜயகுமார்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தான் எனக்கு பூர்வீகம். அம்மாவும், பாட்டியும் நன்றாக சமைப்பர். அவர்களை பார்த்து, எனக்கும் சிறுவயது முதலே சமைக்க பிடிக்கும்.
குடும்ப வறுமை காரணமாக, இன்ஜினியரிங் படிக்க முடியாமல், திருச்சி, துவாக்குடியில் மூன்று ஆண்டுகள், 'கேட்டரிங் கோர்ஸ்' சேர்ந்தேன்.
அதுவரை தமிழ் மீடியத்தில் படித்த எனக்கு, கல்லுாரியில் இங்கிலீஷ் மீடியம் சிரமமாக இருந்தது.
சவாலாக எடுத்து படித்தேன். அதன்பின், சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில், டிரெயினிங் செப் வேலை கிடைத்தது. ஒரே ஆண்டில் கிச்சன் சூப்பர்வைசராக பதவி உயர்வு பெற்றேன்.
நண்பர் வாயிலாக, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், 'தோசை' என்ற ஒரு கிச்சனில் வேலை பார்க்குற வாய்ப்பு... ஆறு ஆண்டுகள் கழித்து, 2014ல், 'ராசா'ன்னு ஒரு ரெஸ்டாரென்ட்டில் வேலை என உயர்ந்து வந்தேன்.
அப்போதுதான், உலகையே ஆட்டி படைக்க வந்தது, கொரோனா தொற்று. அடுத்த என்ன என்ற பயத்திலும், பதற்றத்திலும் இருந்த காலங்கள் அது!
என்னை காப்பாற்றியது என் பாரம்பரியமும், என் கிராமத்து பின்னணியும் தான். தென்மாநில உணவுகள் எனில் இட்லி, தோசை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், குடல்கறி, மூளைக்கறி, நத்தை பிரட்டல் என்று, என் பாட்டி எக்கச்சக்கமான உணவுகளை செய்வார்.
அதையெல்லாம் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்த நினைத்தேன். நண்பர்களுடன் நியூயார்க் வந்து, 'செம' என்ற பெயரில், 'சவுத் இந்தியன் ரெஸ்டாரென்ட்' ஆரம்பித்தேன்.
இவ்வூர் மக்களுக்கு நம்மூர் தோசை, சாம்பார் மிகவும் பிடிக்கும். சீரக சம்பா பிரியாணி, ஆட்டுக்கறி சுக்கா, இறால் தொக்கு, இளநீர் பாயசம் என அந்த பட்டியலில் இன்னும் நிறைய இருக்கிறது.
'நியூயார்க் டைம்ஸ்' இதழில், ஒவ்வொரு ஆண்டும் டாப் 100 பெஸ்ட் ரெஸ்டாரென்ட்களை தேர்ந்தெடுப்பர். அதில், 2022ல் எங்களோட ரெஸ்டாரென்ட், 13வது இடத்தில் இருந்தது.
கடந்தாண்டு 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மண் மனம் பேசும் எங்கள் ஊர் உணவுகளுக்கு இப்படியொரு வரவேற்பா என்று நினைக்கிறபோது பெருமையாக, கர்வமாக இருக்கிறது.
விரைவில் அம்மாவையும், உறவினர்களையும் அழைத்து வந்து என் வேலையை, ரெஸ்டாரென்ட்டை காட்ட வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், அதை சிறந்ததாக செய்ய வேண்டும் என்று நினைத்து உழைத்தேன்.
ஆங்கிலம் பேசத் தெரியாததோ, கிராமத்து பின்னணியோ எனக்கு தடையாக இல்லை. உங்களுக்கும் இருக்காது என்று நம்புங்கள்!

