/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
2024 - 25 நிதியாண்டில் எங்கள் பரிவர்த்தனை 5.5 கோடி ரூபாய்!
/
2024 - 25 நிதியாண்டில் எங்கள் பரிவர்த்தனை 5.5 கோடி ரூபாய்!
2024 - 25 நிதியாண்டில் எங்கள் பரிவர்த்தனை 5.5 கோடி ரூபாய்!
2024 - 25 நிதியாண்டில் எங்கள் பரிவர்த்தனை 5.5 கோடி ரூபாய்!
PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பதுடன், சிறுதானிய விதைகளை பரவலாக்கும் பணியை செய்து வரும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஜனகன்: எங்களுக்கு பூர்வீக நிலம் 3.5 ஏக்கர் இருந்தது. அதில் விவசாயம் பண்ணலாமான்னு பார்த்தேன். தமிழகம் முழுதும் இயற்கை விவசாயம் செய்ற விவசாயிகளை போய் சந்தித்தேன்.
உலகத்திலேயே மிகப்பெரிய தொழில், உணவு உற்பத்தி. தேவை இங்கு ஏராளமாக இருக்கிறது. ஆனால், விவசாயிகளால் உற்பத்தியை சரியான விலைக்கு விற்க முடியவில்லை.
விற்பனை செய்ய தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் இங்கு மிஸ்ஸாகிறது. அதில் வேலை செய்றதுன்னு முடிவெடுத்தேன்.
சிறுதானிய சாகுபடியை அதிகமாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு நம் பாரம்பரிய சிறுதானிய விதைகளை சேகரித்து பரவலாக்க வேண்டும். அடுத்து உழைப்புக்கேற்ற விலை கிடைக்க வேண்டும்.
இதற்காக, விவசாயிகளை சந்தித்துப் பேசினேன். முதலில் எவரும் என்னை நம்பவில்லை. தொடர்ச்சியான கொள்முதலுக்கு உறுதி கொடுத்தேன்.
இன்னொரு பக்கம் மதிப்பு கூட்டல் குறித்தும் கற்றுக் கொண்டேன். சந்தையில் அதற்கான தேவையை ஆய்வு செய்து, ஓரளவுக்கு ஆர்டரும் எடுத்துக் கொண்டேன்.
என் சேமிப்பு, 10 லட்சம் ரூபாய் இருந்தது. அதை வைத்து ஒரு மில் அமைத்தேன். வழக்கமான சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து, தானியங்களை வாங்கினேன்.
'மகிழம் புட்ஸ்' என்ற பிராண்டில் ஆர்கானிக் ஸ்டோர்ஸ், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சப்ளை செய்தேன். விவசாயிகளிடம் இருந்து விதைகளை சேகரித்து, ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்க ஆரம்பித்தேன்.
தற்போது, மாதம் 50 முதல் 60 டன் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்களை சந்தைக்கு அனுப்புகிறேன்.
விவசாயிகளிடம் இருந்து 70 முதல் 100 டன் தானியங்கள் கொள்முதல் செய்கிறேன். தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் வரை வணிகம் விரிவடைந்திருக்கிறது.
தானிய அரிசி, சத்து மாவு, ரவை கஞ்சி மிக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ் என 80க்கும் மேற்பட்ட பொருட்கள் தயார் செய்கிறோம்.
தவிர கழிவாக சேரும் பொருட்களை வைத்து மாட்டுத்தீவனம் செய்கிறோம். 2024 - 25 நிதியாண்டில் எங்கள் பரிவர்த்தனை, 5.5 கோடி ரூபாய்.
தேவை மிகவும் பெரியது. அதற்கு போதுமான விளைச்சல் இல்லை. இன்னொரு பக்கம் விவசாயிகள் உற்சாகமாக இல்லை. அவர்களுக்கு போதிய லாபம் இல்லை.
இந்த இடைவெளியை சரிசெய்ய, அரசுடன் சேர்ந்து சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். நிறைய செய்ய வேண்டி இருக்கிறது.
தொடர்புக்கு:
99624 00092

