PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:26 AM

தர்மபுரி மாவட்டம், சிட்லிங் கிராமத்தில் வசிக்கும், லம்பாடி சமூகத்தைச் சேர்ந்த, 24 வயதாகும் பெண் சிந்து: எங்கள் ஊரில் பெண்கள் அதிகமாக படிக்க மாட்டார்கள்; சிறு வயதிலேயே திருமணமாகி விடும். என் பெற்றோர் மட்டும் தான், நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
துணிகளில் பூ வேலை செய்வது எங்கள் குலத்தொழில். காலப்போக்கில் எங்க சமூக பெண்களும் விவசாய வேலை பார்க்க ஆரம்பித்தனர். அப்போது, எங்கள் ஊருக்கு வைத்தியம் பார்க்க பெண் மருத்துவர் ஒருவர் வந்தார்.
அவர், எங்களின் பழைய உடைகளில் இருந்த பூ வேலைகளை பார்த்து விட்டு, 'இது சாதாரண வேலை இல்லை; பாரம்பரியம்' என்று கூறி, 2006ல், 'பொற்கை' என்று ஓர் அமைப்பை ஆரம்பித்தும் கொடுத்தார்.
நான் உட்பட பெண்கள் பலரும், இரண்டு மூதாட்டிகளிடம் துணிகளில் பூ வேலை செய்வதை கற்றுக் கொண்டோம்.
எனக்கு உடையலங்காரம் குறித்த படிப்பில் ஆர்வம் இருந்ததால், ஓராண்டு வீட்டில் இருந்தே படித்து, அதற்கான நுழைவுத்தேர்வு எழுதினேன்.
இந்திய அளவில் இரண்டாவது இடம் பெற்று, தேசிய உடையலங்கார தொழில்நுட்ப கல்லுாரியில் இடம் கிடைத்தது.
கல்லுாரிக்கு சென்றபோது, அனைவருமே ஆங்கிலத்தில் பேசினர்; நான் பேச ஆரம்பித்தாலே சிரித்தனர். ஒரு கட்டத்தில் வாயைத் திறக்கவே பயந்தேன்.
நாளடைவில் தைரியத்துடன் பேராசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.
நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டு துணி வகைகள், உடையலங்கார வடிவமைப்புகள் என அனைத்தும் கற்றுக் கொண்டேன். என் கல்லுாரியில் சிறந்த வடிவமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டேன்.
படிப்பை முடித்த உடன், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், எங்கள் சமூக மக்களுக்கு நான் இல்லை எனில், வாழ்க்கையே இல்லை. அதனால், எங்கள் ஊருக்கே வந்து விட்டேன்.
'பொற்கை' அமைப்பின் மூலம், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து, பல வித ஆடைகளிலும் பூ வேலைகள் செய்ய ஆரம்பித்தோம்.
வெவ்வேறு மாநிலங்களில், 'ஸ்டால்' போட்டு, எங்கள் கலையை காப்பாற்றும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம். ஒருவர் கை பிடித்து ஒருவர் என எப்படியும் முன்னுக்கு வந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்போது, எங்கள் ஊரில் இருந்து அடுத்தடுத்த இளைஞர்கள் தேசிய உடையலங்கார தொழில்நுட்ப கல்லுாரியில் படிக்க ஆரம்பித்துள்ளனர். திருப்பூர் மாதிரி, எங்கள் கிராமமும் ஒருநாள் ஆடை வடிவமைப்பு மையமாக மாறும்.
தொடர்புக்கு
82489 69312
வீட்டிலிருந்தபடியே பழச்சாறு விற்பனையில் மாதம் ரூ.75,000 லாபம்!
'வெட்சா' என்ற நிறுவனம் வாயிலாக பழச்சாறுகள் தயாரித்து, மாதம் 75,000 ரூபாய் லாபம் ஈட்டும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த, 40 வயதாகும் லிஜா:
என் சகோதரர் அமெரிக்காவில் உள்ளார். அவர் தான், 'கோல்டு பிரெஸ்டு ஜூஸ்' இயந்திரம் குறித்தும், வெளிநாடுகளில் அதற்கான கடைகள் உள்ளது குறித்தும் கூறினார்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை அழுத்தி சாறு எடுப்பதால் அதற்கு, 'பிரெஸ்டு ஜூஸ்' என பெயர் வந்தது.
அந்த இயந்திரத்தில் பழங்கள், காய்கறிகளை போட்டால், நார்ச்சத்து உள்ளிட்டவை வீணாகாமல் சாறு மட்டும் வந்து விடும்.
முதலில் வீட்டு உபயோகத்துக்காக, 60,000 ரூபாய் செலவில் சிறிய, 'கோல்டு பிரெஸ்டு ஜூஸ்' இயந்திரம் வாங்கி பயன்படுத்தினோம். சுவை நன்றாக இருந்ததால், இதையே வியாபாரமாக செய்யலாம் என்ற யோசனை பிறந்தது.
'வெட்சா' என்ற பெயரில், 2023ல் விற்பனையை துவக்கினோம்.
முதலில், நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறினர். வாய்வழி விளம்பரமாக ஆதரவு பெருகி, இப்போது, 700 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்; மூன்று பேர் வேலை பார்க்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் அதிகரித்ததால், 2 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு தொழில் முறை கோல்டு பிரெஸ்டு ஜூஸ் இயந்திரங்கள் வாங்கினேன்.
ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளர்கள், 'புரூட் சாலட்' எனும் நறுக்கிய பழத்துண்டுகளை கேட்க ஆரம்பித்தனர். அதனால், நறுக்கிய பழங்களை தயார் செய்து விற்பனை செய்ய துவங்கினோம். என் கணவரும் ஆதரவாக இருக்கிறார்.
இப்போது, தினமும் சராசரியாக, 85 பாட்டில்களில் காய்கறி சாறு மற்றும் பழச்சாறு, நறுக்கிய பழங்கள், 50 செட்கள் விற்பனை ஆகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கே அனுப்பி விடுவதால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
அன்றாட தேவைக்கான பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் வாங்குவோம். அப்படி வாங்கி தயாரித்தால் தான் சுவையுடன் கூடிய சத்தும் கிடைக்கும்.
அதிகாலை 4:00 மணிக்கு வேலைகளை துவக்கி, காலை 9:00 மணிக்குள் அனைவருக்கும் அனுப்பி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். 200 மில்லி, 300 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் அளவுகளில் விற்பனை செய்கிறோம்.
சில மருத்துவமனைகளுடன் இணைந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு தினமும் ஜூஸ், புரூட் சாலட் வினியோகம் செய்து வருகிறோம்.
மாதம், 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது; இதில், 75,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
உணவு தர சான்றிதழ் வாங்கி உள்ளேன். எதிர்காலத்தில் தனியாக கடை ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. அத்துடன், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், கேரளாவிலும் விற்பனை செய்யும் திட்டமும் உள்ளது.
தொடர்புக்கு:
73395 98166
