/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அடுத்து 2 கிளைகள் துவங்க திட்டம்!
/
அடுத்து 2 கிளைகள் துவங்க திட்டம்!
PUBLISHED ON : ஏப் 04, 2025 12:00 AM

தேனி - பெரியகுளம் சாலையில், டி.எப்.சி., என்ற பெயரில், பாரம்பரிய சிற்றுண்டி கடை நடத்தி வரும் விஜயகுமார்: 'கேட்டரிங்' படித்துவிட்டு, தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பேக்கரி நடத்தி வந்தேன். குடும்ப சூழல் காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக கடையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின், பேட்டரி விற்பனை தொழிலுக்கு மாறினேன்.
கொரோனா தொற்று பரவி, அதையும் முடக்கியது. அப்போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. துரித உணவுகளுக்கு பழகி இருந்த மக்கள், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடத் துவங்கினர்.
என் மனைவி பாரம்பரிய உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவர் என்பதால், கொரோனா காலத்தில் சிறுதானியங்கள் பயன்படுத்தி பாயசம், கொழுக்கட்டை, பனியாரம், பருத்திப்பால் என செய்து கொடுத்து அசத்தினார். அப்போது தான், நாம் ஏன் இந்த பிசினசை துவங்கக் கூடாது என்ற யோசனை பிறந்தது.
பேட்டரி கடையின் ஒரு பகுதியை ஒதுக்கி, பனியாரம், பருத்திப்பால், கொழுக்கட்டை செய்து விற்பனை செய்தோம்.
படிப்படியாக இனிப்பு மற்றும் கார பனியாரம், ராகி சேமியா, முளைகட்டிய பாசிப்பயறு, சுண்டல் உள்ளிட்ட பாரம்பரிய சிற்றுண்டி உணவுகளை கொடுக்கத் துவங்கினோம்.
இதற்கான மூலப்பொருட்களை அதிகமாக வாங்கி, 'ஸ்டாக்' வைத்துக் கொள்வது இல்லை.
தேவையை பொறுத்து அவ்வப்போது வாங்குவதே வழக்கம். கலப்படம் இல்லாத சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய், வெல்லம் என அனைத்தும், 'ஸ்பெஷலாக' ஆர்டர் கொடுத்து, தரமானதாக வாங்குகிறோம்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும், தரமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
இதனால் தான், எங்கள் உணவு பண்டங்களின் சுவை தனித்துவமாக இருக்கிறது.
வேர்க்கடலை சுண்டல், பாசிப்பயறு, முளைகட்டிய பயறு, கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, பாயசம், பருத்திப்பால், ஏழு வகையான காய்கறி சூப், இனிப்பு, கார பனியாரம், அனைத்தும் தலா ஒரு பிளேட், 20 ரூபாய் மட்டுமே. மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை தான் கடை; ஞாயிறு விடுமுறை.
துவக்கத்தில் அனைத்து செலவுகளும் போக, ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் கூட லாபம் கிடைக்காது.
தற்போது, செலவுகள் போக தினமும் 2,500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தரமான உணவுகளை கொடுப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
அடுத்து பெரியகுளம், கம்பம் பகுதிகளில் கிளைகள் துவங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

