/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நேர்மறையான எண்ணங்கள் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும்!
/
நேர்மறையான எண்ணங்கள் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும்!
நேர்மறையான எண்ணங்கள் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும்!
நேர்மறையான எண்ணங்கள் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும்!
PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்த, 78 வயதான ஜி.எஸ்.விஜயலட்சுமி: என் பூர்வீகம் நாகப்பட்டினம். கடல் மீது ஆர்வம் அதிகம். அதற்காகவே படிப்பை முடித்ததும், கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்.
இங்கு, குற்றாலம் பராசக்தி கல்லுாரியில், 1975ல் உதவி பேராசிரியையாக வேலைக்கு சேர்ந்தேன். வேலை பார்த்தபடியே, அடுத்து என் ஆராய்ச்சி படிப்புக்கு என்ன வாய்ப்பு இருக்குன்னு பார்த்த போது, சாண எரிவாயுவுக்கான களம் இருந்தது.
முதன்முதலாக பயோ காஸ் ஆராய்ச்சியை பராசக்தி காலேஜ்ல துவங்கியிருந்த நிலையில், பயோ காஸ் உற்பத்திக்கு பிறகான கழிவுகளை மலை போல குவிச்சு வெச்சுருந்தாங்க.
அந்தக் கழிவுகளை பயன்படுத்தி மீன் வளர்ப்புக்கான உணவுகளை தயார் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தது. செயலில் இறங்கினேன்; வெற்றியும் பெற்றேன்.
அடுத்த கட்டமாக, இயற்கை கழிவுகளை கொண்டு மண்புழு வளர்ப்பிலும் ஈடுபட்டேன். அது, இன்று வரையிலும் தொடர்கிறது. ஓய்வு பெற்ற பின், குற்றாலம் சுற்று வட்டாரங்களில் இருக்கும் மூன்று பள்ளிகளில் மண்புழு உரத்தை பயன்படுத்தி, 300 மூலிகைச் செடிகளை வளர்க்க உதவியாக இருந்து வருகிறேன்.
இந்த உலகில், எதுவுமே தேவையில்லாமல் படைக்கப்படுறதில்லை. வேண்டாத கழிவுகள் என ஒதுக்குற பல விஷயங்களை நமக்கு பயன்படும் விதத்தில் மாற்றிக் கொண்டால், நல்ல பயனை தரும். இயற்கையோட இணைந்து வாழ்ந்தால் போதும்.
முதுமையை எனக்கு தடையாக நினைக்கவில்லை. தினமும் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து விடுவேன். இன்றும் என்னை தேடி வந்து, ஆராய்ச்சி மாணவர்கள் சிலர் தினமும் சந்தேகங்களை கேட்பாங்க.
அவங்களுக்காக பல புத்தகங்களை வாங்கி படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன். அவை புதுசு புதுசா, எனக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தபடியே இருக்கும்.
என் கணவர், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது பல்வேறு பொதுநல அமைப்புகளில் என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
நேர்மறை எண்ணங்கள் தான் நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும். மனதுக்கு பிடித்ததை செய்தபடியே இருந்தால் போதும்... வயது காணாமல் போய் விடும். எனக்கு இசையும் பிடிக்கும். அப்பப்ப வீணையும் வாசிப்பேன்.
என் வீட்டில் மகிழம், நோனி, சைனீஸ் ஆரஞ்சு, புங்கன், சீதா, பிரண்டை, அடுக்குமல்லி, கீரை வகைகள் என, பல மூலிகைகளை வளர்த்து வருகிறேன். தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் 2021ல் எனக்கு, 'பசுமை முதன்மையாளர் விருது' வழங்கி கவுரவித்தது.