/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'பாசிட்டிவ்' எண்ணங்கள் வெற்றிக்கு வித்திடும்!
/
'பாசிட்டிவ்' எண்ணங்கள் வெற்றிக்கு வித்திடும்!
PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

புற்று நோயில் இருந்து மீண்டு, 77 வயதிலும் பரபரப்பாக இயங்கி வரும் மோகனா சோமசுந்தரம்: மயிலாடுதுறை அருகே, சோழன்பேட்டையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.
பெண் கல்வி அங்கீகரிக்கப்படாத காலகட்டத்தில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, நண்பர்கள் உதவியுடன் படித்து பட்டம் பெற்று, பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுாரியில், முதல் பெண் விரிவுரையாளராக சேர்ந்தேன்.
பேராசிரியை, பொறுப்பு முதல்வர் என, 30 ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். என் மன தைரியத்தை சோதித்து பார்க்க வந்தது தான், புற்று நோய். விடுவேனா நான்... அதனுடன் போராடினேன்; எனக்கு தான் வெற்றி. 2010ல் எனக்கு மார்பக கேன்சர் என்று உறுதியானது.
ஆப்பரேஷன் தியேட்டரில் மயக்க மருந்து கொடுக்கும் வரை, 'ஆப்பரேஷனில் என்னென்ன செய்வீர்கள்' என்று, அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஆப்பரேஷன் முடிந்து என்னை பார்க்க வந்தோர் கூட, நான் லேப்டாப்பில் கட்டுரைகளை டைப் செய்து கொண்டிருந்ததை பார்த்து அசந்து விட்டனர்.
மருத்துவமனையில் இருந்த சிறிது நாட்களையும் சோகமாக, இறுக்கமாக இல்லாமல், அங்கிருந்தவர்களிடம் நம்பிக்கையை உண்டாக்கும் விதத்தில் பேசிக் கொண்டு இருந்தேன். என் மன தைரியத்தை தாங்க முடியாத கேன்சர், என்னை விட்டு ஓடிப் போய் விட்டது.
எனக்கு வயதாகி விட்டதாக நினைப்பதே இல்லை. என்னால் முடியும் என்று ஓடிக் கொண்டே இருக்கிறேன். இன்றும் மருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
'பாசிட்டிவ்' எண்ணங்கள், வெற்றிக்கு வித்திடும் என்கிறது அறிவியல். எந்த ஊரில் இருந்தாலும் காலையில் வாக்கிங் சென்று விடுவேன்; சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வேன். எனக்கு நீரிழிவு, 'பிபி' என எதுவுமில்லை. நிறைய காய்கறிகள், பழங்களுடன் காலை உணவை தவிர்க்க மாட்டேன்.
'வயதாகி விட்டது, நம்மால் முடியாது' என்று நான்கு நாட்கள் முடங்கி விட்டால், ஐந்தாவது நாள் உடல் சோர்வடையும்; அடுத்து மனம் சோர்வடையும்; எதை செய்தாலும் ஒரு சலிப்பு வரும்.
அந்த எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். 'இதை முடிச்சுட்டு, அதை செய்ய வேண்டும்' என்று யோசித்தால், உடம்பு ஆரோக்கியமாகவும், மனம் தெம்பாகவும் இருக்கும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு என் வாழ்க்கை பயணத்தை வைத்து நம்பிக்கை ஏற்படுத்துகிறேன். இதுவரை 126 நுால்கள் எழுதி இருக்கிறேன்.
மேலும், புற்று நோய் குறித்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்; ஓரிரு ஆண்டுகளில் முடித்து விடுவேன்.

