/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொழில் துவங்க வறுமை, முதலீடு எதுவும் தடையில்லை!
/
தொழில் துவங்க வறுமை, முதலீடு எதுவும் தடையில்லை!
PUBLISHED ON : நவ 11, 2025 12:00 AM

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள சோரப்புத்துாரில், 'சக்கரவர்த்தி வேளாண் பண்ணை'யை நடத்தி வரும் மணிமொழி: எனக்கு திருமணம் ஆன போது, 14 வயது. எங்கள் சொந்த நிலத்தில் கணவர் விவசாயம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக இருப்பேன்.
கணவர் திடீரென இறந்த போது என் வயது, 30. மேலும், 4 லட்சம் ரூபாய் கடனும், அடமானத்தில் நிலமும் இருந்தது. இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்து நின்றேன்.
மனதை தேற்றியபடி, விவசாயத்தை பார்க்க துவங்கினேன். அந்த சமயத்தில் ஒரு தன்னார்வ நிறுவனத் தின், இயற்கை விவசாய பயிற்சியில் பங்கேற்றேன். பின், பாரம்பரிய நெற்பயிர்களை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்ய துவங்கினேன்.
கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் என்னிடம் தற்போது அரிசி வாங்குகின்றனர். அரிசி விற்பனையில் மாதம் சராசரியாக, 60,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக, மதிப்பு கூட்டல் உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சத்துமாவு தயாரிப்பு, மூலிகை பொடிகள், தானியங்களை அரைப்பது, 'பேக்கிங்' செய்வது என, அனைத்தையும் கற்பித்தனர்.
பின், 50 சென்ட் நிலத்தில் பல மூலிகைகளை பயிரிட்டேன். மூலிகை, தானியங்களை அரைக்க, 20,000 ரூபாய் செலவில் சில இயந்திரங்களை வாங்கினேன்.
மூலிகைகளை வைத்து ஊறுகாய், பொடிகள், சத்து மாவு, சூப் செய்யும் பொடி வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறேன்.
மகளிர் சுயஉதவிக்குழு கூட்டம், உணவு கண்காட்சி என, பல இடங்களில் விற்பனை கூடம் அமைத்தேன்; சமூக வலைதளங்களில் இருந்தும், 'ஆர்டர்'கள் வந்தன.
தற்போது, 500க்கும் மேலான தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 25 வகையான மதிப்பு கூட்டல் உணவு பொருட்களை விற்பனை செய்கிறேன்.
வங்கியில், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, மாவு அரைக்கும் இயந்திரம், எண்ணெய் ஆட்டும் செக்கு மாதிரியான கூடுதல் உபகரணங்களை வாங்கினேன்.
பஸ் வசதி கூட இல்லாத கிராமத்தில், வீட்டில் இருந்தே மாதம், 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுடன் , அடமானத்தில் இருந்த நிலத்தையும் மீட்டு இருக்கிறேன்.
பல பெண்களுக்கு சிறு தொழில் செய்து முன்னேற ஆசை இருக்கும்.
தொழில் தொடங்க வறுமை, படிப்பு, முதலீடு எதுவும் தடை இல்லை; தொழிலை முழுமையாக கற்று , கடினமாக உழைத்தால் வெற்றி உங்களை தேடி வரும்!
தொடர்புக்கு 96885 30220

