/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நஞ்சில்லாமல் உற்பத்தி செய்வது மனநிறைவை தருகிறது!
/
நஞ்சில்லாமல் உற்பத்தி செய்வது மனநிறைவை தருகிறது!
PUBLISHED ON : நவ 12, 2025 12:00 AM

ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்று, கடந்த 12 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் , நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே உள்ள மாராச்சேரி கிராமத்தில் வசித்து வரும் வேணு.காளிதாசன்:
எங்கள் சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பக்கத்தில் உள்ள வெண்மணச்சேரி; அப்பா விவசாயி.
நான், அரசு பள்ளி ஆசிரியராக பல மாவட்டங்களில் பணிபுரிந்ததால், விவசாயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கள் சொந்த நிலத்தை விற்பனை செய்தபோது கூட, விவசாயத்தை குறித்த சிந்தனை ஏற்படவில்லை.
தஞ்சாவூரில், அரசு செவிலியர் பள்ளி முதல்வராக வேலை பார்த்த என் மனைவி, நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அதனால், பணி ஓய்வுக்கு பின், சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
அ தனால், 2009ல், சொந்த ஊரிலேயே, 30 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய தொடங்கினோம்; என் மனைவியின் விருப்பத்துக்காக, இங்கேயே ஒரு வீடு கட்டி, வசிக்கவும் ஆரம்பித்தோம். ஆனால், 2013ல் மனைவி இறந்து விட்டார்.
பண்ணையை சிறப்பான முறையில் பராமரிப்பது தான், மனைவிக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்று, மனதில் தீப்பொறி மாதிரியாக ஓர் எண்ணம் தோன்றியது. மிகுந்த உற்சாகத்தோடு, விவசாய பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தற்போது, ஆண்டுக்கு, 20 ஏக்கரில் சாகுபடி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்கள் வாயிலாக, ஏக்கருக்கு குறைந்தபட்சம், 40,000 ரூபாய் வீதம், 20 ஏக்கருக்கு, 8 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
கோடைப் பட்டத்தில், 10 ஏக்கர் கேழ்வரகு சாகுபடி வாயிலாக, ஒரு லட்சம் ரூபாயும், குறுவைப் பட்டத்தில், 10 ஏக்கர் பூங்கார் நெல் சாகுபடியில், 2.5 லட்சம் ரூபாயும் லாபம் கிடைக்கிறது. இவை தவிர மீன் வளர்ப்பு மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மூலம், 4.5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
பண்ணை வாயிலாக ஒரு ஆண்டுக்கு, 16 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், 1,000 தென்னங்கன்றுகள் நட்டேன்; நன்கு செழிப்புடன் வளர்ந்து வருகின்றன. அவையும் காய்ப்புக்கு வந்துவிட்டால், இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்.
சிறு பரப்பில், அதிக எண்ணிக்கையில் பல வகையான மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில், 2015ல், 1.5 ஏக்கரில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன்; தற்போது, 700 மரங்கள் உள்ளன. இங்கு விளையக்கூடிய பழங்களை சாப்பிட, ஏராளமான பறவைகள் வருகின்றன; அதனால் பழங்களை விற்பனை செய்வதில்லை.
இந்த பண்ணை வாயிலாக கிடைக்கும் வருமானத்தை நிறைவாக உணர்கிறேன்; நஞ்சில்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என்ற திருப்தியும் இருக்கிறது.
தொடர்புக்கு:
98406 23413

