PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

ஏழு வயதிலேயே, 'கேக்' தயாரித்து அசத்தும், இரண்டாம் வகுப்பு படிக்கும், சென்னையைச் சேர்ந்த மித்ரா: எனக்கு, 'பெட் அனிமல்ஸ்' என்றால் மிகவும் பிடிக்கும். சமூக வலைதளத்தில் பெட் அனிமல்சை விரும்பும் யாஷிகா என்ற அக்கா அறிமுகமானார்.
அவர், 'பேக்கிங்' சம்பந்தமாக நிறைய வீடியோக்களை சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டார்.
அவற்றை பார்த்ததும், அந்த அக்காவிடம், 'எனக்கும் பேக்கிங் சொல்லி தர்றீங்களா?' என்று கேட்டேன். அப்படி பொழுதுபோக்கிற்காக கற்றுக்கொள்ள ஆரம்பித்து, சின்ன சின்ன கேக் செய்ய ஆரம்பித்தேன்.
நாளடைவில், இதில் எனக்கு இருந்த ஆர்வத்தை பார்த்த என் பெற்றோர், யாஷிகா அக்காவிடமே என்னை பயிற்சிக்கு அனுப்பினர். பயிற்சிக்கு பின், நன்றாகவே கேக் தயார் செய்தேன்.
அப்பாவின் பிறந்த நாளுக்கு நான், கேக் தயார் செய்து வைத்திருந்தேன். கேக் கட் செய்து முடிக்கும்வரை நான் செய்தது என்று அவரிடம் சொல்லவே இல்லை.
அதன்பின் விஷயத்தை கூறியதும், அவர் மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று முதல், தினமும் விதவிதமான பிளேவரில் கேக் செய்ய ஆரம்பித்தேன்.
தற்போது, 130க்கும் மேலான பிளேவர்களில் கப் கேக் செய்கிறேன்.
இப்போதைக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்காக, நடிகர் விஜய் சேதுபதி அங்கிளை பார்க்க சென்றோம். அப்போது நானே தயார் செய்த கேக்கை எடுத்து சென்று கொடுத்தேன். சாப்பிட்டு பார்த்து, 'அருமையாக இருக்கிறது...' என்று பாராட்டினார்.
'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 2024' தேர்வு கடந்தாண்டு, 'ஆன்லைனில்' நடந்தது. அந்த தேர்வில் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாமல், தொடர்ந்து நான்கு மணி நேரம், 100 வகையான கேக்குகளை தயார் செய்தேன்.
தேர்வை முடித்ததும், கையெல்லாம் ரத்தம் கட்டி வலிக்க ஆரம்பித்தது. ரெக்கார்ட் அப்ரூவல் ஆன தகவலை, என்னிடம் பெற்றோர் சொல்லாமல், 'சஸ்பென்சாக' வைத்திருந்தனர்.
சர்ட்டிபிகேட் வந்ததும், 'உனக்கு ஒரு கிப்ட் வாங்கி இருக்கிறோம்' என்று சொல்லி, என்னிடம் கொடுத்தனர். அந்த சர்ட்டிபிகேட்டை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அடுத்து, கின்னஸ் சாதனைக்கு தயாராவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளேன்.
*******************
உதவிக்கு யாருமின்றி அனாதையாக தவிக்கிறேன்!
திருச்சி அரசு மருத்துவமனை வாசலில், நோயாளிகளுக்கு தேவையான துண்டு, கைக்குட்டை, லுங்கி மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு மை, சங்கு போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் கஸ்துாரி:
எனக்கு இப்ப, 66 வயசாகுது. 10 வருஷமா இங்கு கடை போடுறேன். 13 வயதில் திருமணமானது. என், 23வது வயதில், கணவர் புற்றுநோய் பாதிப்பில் இறந்து விட்டார். மூன்று பெண் குழந்தைகள்; இரண்டு குழந்தைகள் நோய் வந்து, குழந்தையாக இருக்கும்போதே இறந்து விட்டன. ஒரு பெண்ணை படிக்க வைத்து திரு
மணம் செய்து கொடுத்தேன். அதற்கு மூன்று குழந்தைகள்; அனைவருக்கும் திருமணமாகி வேறு வேறு ஊருக்கு சென்று விட்டனர்.
அந்த ஒரு மகளும் மாரடைப்பில் இறந்து விட்டாள். அதன்பின் எனக்கென எவரும் இல்லை; அனாதை ஆகிட்டேன். பேரப்பிள்ளைகள் யாரும் வந்து பார்க்க மாட்டாங்க; எப்போதாவது பேசுவாங்க.
குளித்து முடித்து, காலை 8:00 மணிக்கெல்லாம் இங்கு கடை போட வந்து விடுவேன். நன்றாக வியாபாரம் ஆகும் நாளில், 500 ரூபாய் வரை கிடைக்கும். மூன்று மாதத்திற்கு முன் ரோட்டை கடந்தபோது, ஒரு பைக் வேகமாக வந்து என்னை அடித்து விட்டு நிற்காமல் போய் விட்டது. தலையில் பெரிய அடி. எல்லாரும் வந்து துாக்கி ஜி.எச்.,சுல சேர்த்தனர்.
அப்போது கடையில் கிட்டத்தட்ட, 7,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி போட்டிருந்தேன்; எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டாங்க. எங்க வீட்டு ஓனரும், அவங்க பையனும் தான் மருந்து, மாத்திரைக்கு செலவு பண்ணினாங்க; 13,000 ரூபாய் ஆச்சு. 3,000 ரூபாய் கொடுத்துட்டேன்; மீதியை கொடுக்கணும். 10 மாசமா வாடகை வேற கொடுக்கல.
கொஞ்சம் கொஞ்சமா உழைச்சு, எல்லாத்தையும் அடைக்கணும்; ஆனா, உதவத் தான் யாரும் இல்லை. கடந்த சில மாதங்களாக, வருமானம் எதுவும் இன்றி, ஜி.எச்.,சில் யாராவது அன்னதானம் போடும்போது போய் சாப்பிட்டு கொள்கிறேன். கடைக்கு கொஞ்சம் பொருட்கள்
வாங்கி போட்டேன் எனில், பழையபடி வருமானம் வரும். இப்ப கூட, ஆப்பரேஷன் தியேட்டர்ல நோயாளிக்கு தேவைப்படும் துணி இருக்கா, அது இருக்கா, இது இருக்கான்னு கேட்டுட்டு போறாங்க. இல்லைன்னு சொல்லும்போது மனசு ரொம்ப வலிக்குது. இப்படியேவா வாழ்க்கை போயிடும்... எப்படியும் வழி பொறக்கும்.
தொடர்புக்கு: 90927 73507.