/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முக்கிய பணியை பிரதமர் மோடி தந்திருக்கிறார்!
/
முக்கிய பணியை பிரதமர் மோடி தந்திருக்கிறார்!
PUBLISHED ON : ஜன 28, 2025 12:00 AM

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'வின் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், கீழக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த வி.நாராயணன்: எங்களுடையது மிகவும் எளிய குடும்பம். அப்பா, சிறிய அளவில் தேங்காய் வியாபாரம் செய்தார். கீழக்காட்டுவிளை அரசு துவக்கப் பள்ளியில் படித்தேன்.
ஒன்பதாம் வகுப்பு வரை மண்ணெண்ணெய் விளக்கு தான். அதன்பின், வீட்டுக்கு மின் இணைப்பு வந்து, 10ம் வகுப்பில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றேன்.
நாகர்கோவில் கோணம் அரசு தொழில் நுட்ப கல்லுாரியில், இயந்திரவியல் துறையில் சேர்ந்தேன். அங்கும் முதல் மதிப்பெண். பி.இ., படிக்க ஆசை.
ஆனால், குடும்ப சூழ்நிலையால், செலவு செய்ய இயலாது. அதனால், கேம்பஸ் இன்டர்வியூவில் சென்னையில் வேலை கிடைத்தது. அதன்பின், 1984ல் இஸ்ரோவில் சேர்ந்தேன்.
முதலில் திட எரிபொருள் செயற்கைக்கோள் செலுத்தும் வாகன பிரிவில் பணி கிடைத்தது. அடுத்தடுத்து மேலே செல்ல, படிப்பு அவசியம் என புரிந்தது.
வேலை செய்தபடியே ஏ.எம்.ஐ.இ., பட்டம் பெற்றேன். கோரக்பூர் ஐ.ஐ.டி.,யில் கிரயோஜெனிக் பிரிவில் எம்.டெக்., முடித்தேன். இஸ்ரோ, 1990ல் புதிதாக துவங்கிய திரவ உந்து மையத்துக்கு மாற்றப்பட்டேன்.
அங்கு பணியாற்றியபடியே கோரக்பூர் ஐ.ஐ.டி.,யில் கிரயோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்.
கடந்த 2014ல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி., டி - 5 ராக்கெட்டில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான கிரயோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது.
சிக்கலான கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை வடிவமைத்து, அதில் வெற்றிஅடைந்தது மாபெரும் சாதனை. சந்திரயான் - 3 திட்டத்தின் வெற்றிக்கு, இத்தாலியின் மிலன் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில், எனக்கும், என் குழுவினருக்கும் விருது வழங்கப்பட்ட தருணமும் முக்கியமானது.
நாம், 1980ல் முதன்முதலில் எஸ்.எல்.வி., - 3 ராக்கெட் ஏவினோம். அது, 34 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை எடுத்து சென்றது.
இப்போது, 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் ராக்கெட்டை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். இந்தியாவுக்கென விண்வெளி ஆய்வு கூடம் அமைக்கும் பெரிய திட்டமும் உள்ளது.
முக்கியமான பணியை பிரதமர் மோடி எனக்கு தந்திருக்கிறார். இதற்கு இறைவனுடைய அருளும், பெற்றோர், நண்பர்கள், குடும்பத்தினருடைய நல்லாசியுமே காரணம்.
உடன் பணியாற்றுவோர் பங்கும் இதில் நிறைய இருக்கிறது. அனைவரையும் மகிழ்ச்சியாக வழிநடத்தி, நாட்டுக்கு பயன்படும் வகையில் இயங்க வேண்டும்.

