/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மூன்றே ஆண்டில் ரூ.15 லட்சம் லாபம் கிடைத்தது!
/
மூன்றே ஆண்டில் ரூ.15 லட்சம் லாபம் கிடைத்தது!
PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

'தி மேங்கோ பேக்டரி' என்ற இணையதளம் வாயிலாக, இந்தியாவில் உள்ள பெருநகரங்களுக்கு, சேலம் மாம்பழங்களை விற்பனை செய்து வரும், சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த சுகைல்: பள்ளிப்பருவ நண்பர்கள் நாங்கள் ஐவர். எங்களுக்கு சென்னை அண்ணா பல்கலை கழகத்தில், வெவ்வேறு துறையில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒருமுறை சென்னையில் ரயில் பயணத்தின்போது, நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது தான், சேலத்தில் இருந்து மாம்பழங்களை இயற்கை தன்மை மாறாமல், மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என திட்டமிட்டோம்.
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதால், நாங்களே உடனடியாக இணையதளம் உருவாக்கினோம்.
விவசாயிகளிடம் நேரடியாக சென்று எங்களுடைய தொழில் யோசனையை கூறி, அவர்களிடம் மாம்பழங்களை வாங்க முயற்சி செய்தோம்.
அதே சமயம், விவசாயிகளுக்கும் அவர்களின் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்து கொண்டோம்.
எங்களது முதல் நோக்கம், ரசாயனம் வைத்து பழுக்க வைக்காத மாம்பழங்களை பெருநகரங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான்.
தொழில் துவங்கியவுடன், லாபத்தில் இலக்கு வைக்காமல், 1 டன் விற்பனை என்று இலக்கு வைத்தோம். முதல் ஆண்டில், 700 கிலோ மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
அதன் வாயிலாக ஒருவருக்கு தலா, 5,000 ரூபாய் லாபம் கிடைத்தது. அதைவிட அதிகமான அனுபவமும் கிடைத்தது.
கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும்போதே தொழில் வாயிலாக, 25,000 ரூபாய் லாபம் ஈட்டியது எங்களை ஊக்கப்படுத்தியது. அடுத்து, இரண்டாம் ஆண்டு மாம்பழம் சீசன் துவங்கியவுடன், விவசாயிகளை சந்தித்து மாம்பழங்களை கொள்முதல் செய்தோம்.
அந்த ஆண்டு, 10 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்து, 2.50 லட்சம் ரூபாய் வரை லாபம் எடுத்தோம். அது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் கடந்த இரு மாதங்களில், 65 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளோம். 15 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.
முதல் ஆண்டில் ஆண்டு முழுதும் விற்பனையான, 700 கிலோ, இந்த ஆண்டு ஒரே நாளில் விற்பனையானது.
இதன் வாயிலாக, சரியான பாதையில் தான் செல்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. இன்னும் செல்ல வேண்டிய துாரம் பெரிது என்றாலும், எடுத்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய திருப்தி இருக்கிறது.
*****************************
ருசிக்கு தரும் முக்கியத்துவத்தை சுகாதாரத்துக்கும் தர வேண்டும்!
'பிரைடு சிக்கன்' போல, 'பிரைடு மஷ்ரூம்' விற்பனையில் கலக்கும், 'மஷ்ரூம் மாமா' நிறுவனரான, சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரதீப்:சினிமா போட்டோகிராபி படிப்பை ஓராண்டு முடித்துவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து ஒரு படம் செய்தோம். 'இது நமக்கு சரியாக வராது' என்று புரிந்ததும், நேராக வீட்டுக்கு வந்து விட்டேன்.
ஒரு நாள் இரவு காளான் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். 'காலை 10:00 மணிக்கு தான் கிடைக்கும்; 10 பாக்கெட் கேட்டால், இரண்டு பாக்கெட் தான் தருவார் வியாபாரி.
ரொம்ப டிமாண்ட் பா' என்று கடைக்காரர் கூறினார். உடனே, காளானை வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது.
காளான் வகைகளில் மிகவும் சுவையானது சிப்பி காளான் தான். அதனால், விவசாயிகளிடம் இருந்து, 1,000 ரூபாய்க்கு காளான் வாங்கினேன். 1,000 ரூபாய்க்கு, 'பேக்கேஜிங் மெட்டீரியல்' வாங்கினேன்.
அவ்வளவு தான்
முதலீடு. 'மஷ்ரூம் மாமா' என்று பெயர் வைத்து, வீடு வீடாகச் சென்று விற்பனை செய்தேன். ஆனாலும், லாபம் இல்லை.
கடைசியாக, காளான் உணவுக்கென ஒரு கடை திறந்தேன். 'யு டியூப்' பார்த்து சில ரெசிப்பிகள் செய்து வைத்தோம்; ஒருவர் கூட வரவில்லை. இரண்டு மாதங்களில், 70,000 ரூபாய் நஷ்டம்.தீவிரமாக யோசித்ததில், 'நாம் ஏன் காளானை பிரை செய்யக்கூடாது' என்று தோன்றியது. புது புது மசாலாக்கள் செய்து பார்த்தேன். ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டு பார்த்து, 'சிக்கனா?' என கேட்க, அந்த காம்பினேஷனையே இறுதி
செய்தேன்.
உணவு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். ருசிக்கு தரும் முக்கியத்துவத்தை சுகாதாரத்துக்கும் தர வேண்டும். நாம் செய்வது புது விதமான உணவு என்பதால், அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்ள, உணவுக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு ஆறு மாதத்தில் எண்ணெய் பயன்பாடு, உணவு பாதுகாப்பு எல்லாம் கற்று, வெளியே வந்தேன். காளான் வடிவம் சிறகு மாதிரி இருக்கும். அதனால், 'மஷ்ரூம் விங்ஸ்' என, எங்கள் உணவுக்கு பெயர் வைத்தோம். மஷ்ரூம் மாமா கடையின் அடையாளமாக, 'மஷ்ரூம் விங்ஸ்' மாறியது.
படிப்படியாக கடையில் கூட்டம் அதிகமாகி, ஒரே ஆண்டில் நாங்கள் எதிர்பாராத இடத்துக்கு வந்தோம். அடுத்த கட்டமாக பெரிய கடை பிடித்தோம்.'இன்டீரியர்' மாற்றினோம். பனீர் போன்று பல, 'டிஷ்'கள் செய்தோம். 'ஆன்லைன்' விற்பனைக்கு சென்றோம். அடுத்தடுத்து, 'அவுட்லெட்'கள் திறக்கிற வேலை நடக்கிறது. முதலில் சென்னை, அடுத்து பிற நகரங்களுக்கு செல்வோம்.