/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் லாபம்!
/
8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் லாபம்!
8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் லாபம்!
8 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் லாபம்!
PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், கூடலுார் கிராமத்தில், பாரம்பரிய நெல் ரகங்களை --சாகுபடி செய்து வரும், மெக்கானிக்கல் இன்ஜினியரான விவேக்: நான் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்ததும், மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் வேலை கிடைத்தது.
அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருந்ததாலும், குடும்பத்தைப் பிரிந்து இருந்ததாலும், மன உளைச்சல் ஏற்பட்டது. இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதால், வேலையை 2018ல்- ராஜினாமா செய்தேன்.
எனக்காக, ஊரில் 8 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்தார் அப்பா. அதில், 6 ஏக்கரில் துாயமல்லி, கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் செய்கிறோம்.
முதலில், வேளாண் பொறியியல் துறை வாயிலாக, இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து மேடு, பள்ளங்களை சரி செய்தோம்.
எலி வெட்டால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த, வரப்பில் இருந்து 1 அடி இடைவெளி விட்டு நாற்றுகள் நடவு செய்தோம். 10 லிட்டர் தண்ணீருக்கு, 100 மி.லி., வீதம் மீன் அமிலம் கலந்து வரப்பு ஓரங்களில் தெளித்தோம். படிப்படியாக மகசூல் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதில் ஒரு மூட்டையில், 60 கிலோ நெல் வீதம், ஏக்கருக்கு 18 மூட்டை என, 6 ஏக்கருக்கு மொத்தம், 6,480 கிலோ நெல் மகசூல் கிடைக்கிறது. அதில், 480 கிலோவை விதைப்புக்கு எடுத்து வைத்து விடுவேன். மீதி, 6,000 கிலோ நெல்லை அரைத்தால், 3,000 கிலோ அரிசி கிடைக்கும்.
அதை, 1 கிலோ, 125 ரூபாய் என விற்பனை செய்தால், 3.75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி, அரிசி மதிப்பு கூட்டல் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் போக மீதி, 2.45 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.
உடனடி வருமானத்துக்காக, 1 ஏக்கரில் இயற்கை முறையில், 'கோ 50, கோ 51' உள்ளிட்ட ரகங்கள் பயிர் செய்கிறோம். 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்கிறது.
அதை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதன் வாயிலாக, 45,000 ரூபாய் வருமானம்; சாகுபடி செலவு போக, 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
மேலும், 4 மாதம் வயது கொண்ட, 10 ஆட்டுக்குட்டிகளை விலைக்கு வாங்கி, ஆறு மாதங்கள் வரை வளர்த்து, விற்பனை செய்கிறேன். எங்கள் நிலத்திலேயே மேய்ச்சலுக்கு விடுவதால், தீவன செலவு கிடையாது. ஒரு ஆடு, 6,000 ரூபாய் வீதம், 10 ஆடுகள் வாயிலாக 60,000 ரூபாய் கிடைக்கும்.
இதுபோக, கோழிகள் விற்பனை, கால்நடைகளுக்கான பசுந்தீவன பயிர்கள் சாகுபடி என, ஆண்டுக்கு மொத்தம், 3.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
63693 59630