/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எவ்வளவு பணம் கிடைத்தாலும் தரம் குறையக் கூடாது!
/
எவ்வளவு பணம் கிடைத்தாலும் தரம் குறையக் கூடாது!
PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

சேலம், ஆத்துாருக்கு பக்கத்தில் சிறிய ஊரில் நகை கடை துவங்கி, இன்று ஐந்து ஊர்களில் கிளைகள் திறந்துள்ள அசோக் ஆதித்யா: நான் பிறந்தது, ஆத்துார் அருகேயுள்ள உமையாள்புரம் கிராமம். ஒரு பிசினஸ்மேன் ஆக வேண்டும் என்ற தெளிவான முடிவுடன் தான் பி.காம்., படிப்பில் சேர்ந்தேன்.
கல்லுாரி முடித்ததும் என்ன தொழில் துவங்கலாம் என்று யோசித்த போது, தரமான நகைக்கான தேவை எங்கள் ஊரில் இருந்ததால், அத்தொழில் செய்ய முடிவு எடுத்தேன். ஆனால், அதுகுறித்து எதுவும் தெரியாததால், அதை கற்றுக் கொள்ள சென்னைக்கு கிளம்பினேன்.
சென்னை, தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில், 'வேர்ல்ட் கோல்டு கவுன்சில்' அமைப்பு ஓராண்டுக்கான ஜுவல்லரி டெக்னாலஜி டிப்ளமா கோர்ஸ் நடத்தியது. பகலில் டிப்ளமா வகுப்பு; மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை பிரின்ஸ் ஜுவல்லரியில் பயிற்சி மாணவனாக, 'இன்டெர்ன்' சேர்ந்தேன்.
அப்படிப்பு முடிந்ததும், நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்; சம்பளம் 1,000 ரூபாய். அங்கு எனக்கு தரப்பட்ட முதல் வேலை, சாலையில் நின்று வருவோர், போவோரை கடைக்கு வருமாறு கூப்பிட வேண்டும்.
அடுத்து, பணிவுடன் கதவை திறந்து விட வேண்டும். இவற்றை செய்ய முதலில் வெறுப்பாக இருந்தாலும், வேலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செய்தேன்.
பொறுப்பாக செய்ததால், விற்பனைக்கு உதவி செய்வது என அடுத்தடுத்து பணி உயர்வு பெற்று, கடைசியில் நகை தயார் செய்யும் பொற்கொல்லர்களிடம் தங்கத்தை தந்து வாங்குவது வரை அனைத்து வேலைகளையும் திறமையாக செய்தேன்.
பின், ஊருக்கு வந்து புத்திரகவுண்டம் பாளையத்தில், 120 சதுர அடியில் மிகச்சிறிய கடையை வாடகைக்கு எடுத்து நடத்த துவங்கினேன்.
சில ஆண்டுகளில் கடைக்கு படிப்படியாக மக்கள் வரத்துவங்கினர். என் நகை தொழில், வேகம் எடுக்க ஆரம்பித்தது. சொந்தமாக இடம் வாங்கி கடை நடத்த துவங்கினேன்.
வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தந்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் வருவர் என்று புரிந்து கொண்டேன். இரண்டாவது கடையை, மலை கிராமமான கருமந்துறையில், 2017ல் துவங்கினேன்.
மூன்றாவது கடையை, மங்களபுரத்தில், 2022ல் துவங்கினேன். நான்காவது கடையை, வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் திறந்தேன். ஐந்தாவது கடையை ஆத்துாரில், 2023ல் துவங்கினேன்.
இன்று என் குடும்ப உறுப்பினர்கள் பலரும், என் பணிகளை பகிர்ந்து கொள்கின்றனர். இப்போது என்னிடம், 130 பேர் வேலை பார்க்கின்றனர். எவ்வளவு பணம் கிடைத் தாலும், தரம் குறைவாக பிசினஸ் செய்யக்கூடாது என்பதே என் தாரக மந்திரம்!