தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!'

'சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!'

'சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!'


PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரே நிலத்தில் சுழற்சி முறையிலும், ஊடுபயிராகவும் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து நிறைவான லாபம் ஈட்டும், அரியலுார் மாவட்டம், அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த, 59 வயதாகும் கந்தசாமி:

எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். பாசன வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்துள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை பட்டத்தில், 4 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். நிலக்கடலை விதைக்கும் போதே, வரப்பு ஓரங்களில், 1,000 செடி முருங்கை கன்றுகளை நடவு செய்து விடுவேன். கடலைக்கு கொடுக்கும் இயற்கை இடுபொருட்களே, செடி முருங்கைக்கும் போதுமானது. அதிலேயே செழிப்பாக வளரும். இதற்கென தனியாக தண்ணீர் கூட பாய்ச்ச வேண்டியது இல்லை.

நிலக்கடலை அறுவடை முடிந்ததும், அதே நிலத்தில் உளுந்து, தட்டைப்பயறு, பச்சைப்பயறு சாகுபடி செய்வோம்; இதற்கும் எந்த பராமரிப்பும் கிடையாது. பயறு அறுவடை முடிந்ததும், அதே 4 ஏக்கரில் சிறுதானியங்களை சாகுபடி செய்வோம். இந்த பயிர்களின் அறுவடை முடிந்ததும், இரண்டு மாதங்களுக்கு நிலத்தை ஆற விடுவோம்.

இப்படி ஒரே நிலத்தில் பல பயிர்களை சுழற்சி முறையில் மாற்றி மாற்றி சாகுபடி செய்வதால், சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு மண் வளமாகிறது. இதில்லாமல், 30 சென்ட் பரப்பில் தலா 300 மல்லிகை செடிகளும், சம்பங்கி செடிகளும் வளர்க்கிறேன்.

மேலும், அரை ஏக்கர் அளவுக்கு குட்டை வெட்டி மீன்கள் வளர்க்கிறேன். எட்டு மாதங்கள் வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்வேன்; சுற்றுவட்டார மக்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வர். இத்துடன் ஆறு மாடுகள், 10 ஆடுகள், 50 நாட்டுக்கோழிகள், ஐந்து வான்கோழிகள், 20 வாத்துகள் வளர்க்கிறேன்.

வீட்டு தேவைக்கு போக மீதமிருக்கும் பாலை விற்பனை செய்வேன். முட்டை, கோழிக்குஞ்சுகள், வளர்ந்த கோழிகள், ஆட்டுக்குட்டிகள் விற்பனை வாயிலாகவும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

வேலியோரங்களில், 20 முந்திரி மரங்களும், 100 தேக்கு மரங்களும் நட்டுள்ளேன். மேலும், தானாக முளைத்த 300 வேப்ப மரங்களும் உள்ளன. 5 ஏக்கரில் பல பயிர்கள் சாகுபடி, பால், மீன் விற்பனை மற்றும் கால்நடை வளர்ப்பு வாயிலாக, ஆண்டுக்கு 7.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: 89393 57335.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us