/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
2030க்குள் ரூ.100 கோடி 'டர்ன் ஓவர்!'
/
2030க்குள் ரூ.100 கோடி 'டர்ன் ஓவர்!'
PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

சென்னையில், 'பிக்சல் ஸ்டூடியோஸ்' நிறுவனத்தை நடத்தி வரும், டி.ஜி.ஸ்ரீனிவாசன்: என் குடும்பம் பிசினஸ் குடும்பம். அப்பா, புகையிலை வியாபாரம் செய்து வந்தார். சிறுவயது முதலே, கம்ப்யூட்டர் குறித்த தொழிலை செய்ய வேண்டும் என நினைத்தேன்.
எம்.பி.ஏ., முடித்ததும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இரு ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
அங்கு வேலையில் சேர இரு காரணங்கள்... டாடா என்பது என் கனவு நிறுவனம்; இரண்டாவது, ஒரு பெரும் தொழில் நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை நேரடியாக பார்த்து தெரிந்து கொண்டால், என் பிசினசுக்கு மிகவும் பயன்படும். அதன்பின், தொழில் துவங்குவதற்காக, அந்த வேலையை ராஜினாமா செய்தேன்.
எனக்கு பிடித்தது கம்ப்யூட்டர். என் ரத்தத்தில் இருப்பது, 'கிரியேட்டிவிட்டி!' அதனால், இந்த இரண்டையும் இணைத்து, ஒரு பிசினஸ் செய்தால் நன்றாக இருக்குமே என தோன்றியது.
அப்போது, ஜுராசிக்பார்க் படம் வந்திருந்த நேரம். அனிமேஷன் வாயிலாக உலகையே ஆச்சரியப்பட வைக்க முடியும் என்பது நிரூபணமாகி இருந்தது.
அதனால், அனிமேஷன் தொடர்பான இன்ஸ்டிடியூட் துவங்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, 'அரினா அனிமேஷன் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்தை, 'பிரான்சைஸ்' முறையில் 1997ல் துவக்கினேன்.
'வெப் டிசைனிங்' உட்பட பல்வேறு விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக, என் இன்ஸ்டிடியூட்டை தேடிவர, எனக்கு நல்ல வருமானம் கிடைத்த அதே வேளையில், இந்த துறை குறித்து நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
தவிர, இன்டர்நெட் வருகையால், புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கவே, 'பிக்சல் ஸ்டூடியோஸ்' என்ற நிறுவனத்தை துவக்கினேன்.
சமூக வலைதளங்கள் வருகையால், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' சூடுபிடிக்க ஆரம்பித்தது. பத்திரிகைகள், 'டிவி' ஆகியவற்றில் தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, டிஜிட்டல் வாயிலாக விளம்பரம் செய்து, நிறுவனங்களுக்கான பிசினசை அதிகப்படுத்தும் வேலையை செய்ய ஆரம்பித்தோம். முக்கியமாக, 'பிராண்டிங்' செய்வதில் அதிக ஆர்வம் காட்டினோம்.
இன்று நாங்கள், மெடிக்கல், ரியல் எஸ்டேட், ஐ.டி., என உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்களுக்கும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை செய்து வருகிறோம். இன்று, என் நிறுவனத்தில், 72 பேர் பணிபுரிகின்றனர்.
சென்னை தவிர, பெங்களூரு, மும்பை, சிங்கப்பூரிலும் செயல்பட்டு வருகிறோம். இதை பல இடங்களில் நிறுவவும், 2030க்குள், 'டர்ன் ஓவரை' 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடனும் உழைத்து வருகிறேன்.