PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM

கடந்த, 2023ம் ஆண்டிற்கான, 'கனவு ஆசிரியர்' விருதை வாங்கிய, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் ஆசிரியை டி.எஸ்.லீலாவதி:
ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால், 'கனவு ஆசிரியர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 379 ஆசிரியர்கள் 2023 ஆண்டிற்கான விருது பெற்றுள்ளோம்.
இந்த விருது, மாணவர்களின் கனவுகளை நனவாக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அதற்காக, மற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் கனவை நனவாக்குபவர்கள் இல்லை என்ற அர்த்தம் இல்லை; எல்லா ஆசிரியர்களின் கனவும், லட்சியமும் அது தான்.
இதற்கான போட்டித் தேர்வுகளை, மூன்று கட்டமாக அரசு நடத்துகிறது. முதல் தேர்வில் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறமை, மொழி ஆளுமைக்கான தகவல் தொடர்பு, திறனாய்வு பார்வை சம்பந்தப்பட்ட வினாக்கள் இருக்கும்.
இத்தேர்வில் தமிழகமெங்கும் கலந்து கொண்டவர்கள் ஏராளம்; இதில் 1,500 ஆசிரியர்கள் தேர்வானோம். இரண்டாம் கட்டத் தேர்வில், பாட நிபுணத்துவம், கற்பித்தல் இயல் சம்பந்தமாக வினாக்கள் கேட்கப்பட்டன.
இதில், 934 பேர் தேர்வாயினர். மூன்றாம் கட்டத் தேர்வு, 'ஜூம் மீட்டிங்' வாயிலாக நடந்தது. அதில், ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்டு, கற்பித்தல் திறனுக்கு மதிப்பெண் கொடுத்தனர்.
இதில் பாடம் சார்ந்த கற்பித்தல், பொதுவான கற்பித்தல் என, இரண்டு பிரிவுகளில், 379 ஆசிரியர்கள் தேர்வானோம்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆடியோ, வீடியோ வடிவிலான தொழில்நுட்பங்கள் தற்போது வளர்ந்திருக்கின்றன. 'ஆன்லைன்' வகுப்புகள் வந்து விட்டன. பாடங்களும், காட்சி வடிவில் வீடியோவாக கிடைக்கின்றன.
ஹைடெக் ஆய்வகங்கள் வந்து விட்டன. இதனால் மாணவர்களின் நினைவாற்றல், உள்வாங்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால் என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., - எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்குள் எளிதாக நுழையும் வழியும் காண்பிக்கப்படுகிறது.
தவிர, மாணவர்கள் அறிவியலில் மட்டுமல்ல, அனைத்து பாடங்களிலும் தனித்துவம் பெறலாம். அதுபோக மாணவர்களுக்குள் இருக்கும் திறனை, ஆர்வத்தைக் கண்டுபிடித்து.
அவர்கள், 'ராஜபாட்டை'யில் பயணிக்க பாதை அமைத்துக் கொடுக்க, இந்த, 'கனவு ஆசிரியர்' விருது, ஆசிரிய பெருமக்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கும்!
