தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/செங்கல் வீடும், தாயின் சிரிப்பும்

செங்கல் வீடும், தாயின் சிரிப்பும்

செங்கல் வீடும், தாயின் சிரிப்பும்


PUBLISHED ON : அக் 09, 2026 04:58 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2026 04:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவ, மாணவியரின் உயர்கல்விச் செலவை ஏற்று, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வரும் 'ஆனந்தம் யூத் பவுண்டேஷன் சார்பில், மாணவர்களுக்கான வாழ்வியல் பயிலரங்கின் நிறைவு விழா 'ஆனந்தம் தன்னம்பிக்கைத் திருவிழா'வாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கல்விக்கு மட்டுமே ஒரு தலைமுறையையே மாற்றும் சக்தி உண்டு' என்ற உயரிய நோக்கத்தோடு இயங்கி வரும் ஆனந்தம் அமைப்பு, இதுவரை 1,378 ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளது.

இதில் மருத்துவம், பொறியியல் , கலை மற்றும் அறிவியல் , டிப்ளமோ மற்றும் பாராமெடிக்கல்,சிஏ, செவிலியர், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் மாணவ,மாணவியர் பயின்று பயன்பெற்றுள்ளனர்.Image 1628378இங்கு பயின்ற மாணவர்கள் படிப்பை முடித்து, மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளிலும்,பல்வேறு உயர்நிறுவனங்களிலும், உலகின் முன்னணி தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல பொறுப்புகளில் பணியாற்றித் தங்கள் குடும்பத்தின் வறுமையை முற்றிலுமாக அகற்றியுள்ளனர்.

அந்த மாணவர்களில் சிலர் இந்த தன்னம்பிக்கை திருவிழாவில் தங்கள் அனுபவத்தை கூறினர்,அதில் கடலுார் நிஷாந்தனின் பேச்சு தனித்துவமாக இருந்தது

'என்னை படிக்க வைப்பதற்காக என் தாயார் பட்டபாடு பெரும்பாடு. என் கல்லூரிச் செலவிற்காகப் பகல் இரவு பாராமல் தையல் இயந்திரத்தில் துணிகள் தைத்தார். ஒருகட்டத்தில் அவருக்குக் கடுமையான குதிகால் வலி ஏற்பட்டு, 'இனி மிஷினை மிதிக்கக் கூடாது' என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை வந்தது. ஆனால், சோர்ந்துபோய்விடாத என் அம்மா, குடும்பத்தைக் காப்பாற்றத் துாய்மைப்பணியாளர் வேலையில் சேர்ந்தார். அந்த வேலையில் வரும் மாத வருமானத்தில் பெரும்பகுதியை எனது கல்விக்காகவே ஒதுக்கினார்.Image 1628379அம்மாவின் இந்தத் தியாகத்தை உணர்ந்து நானும் தீவிரமாகப் படித்தேன். பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களும் எடுத்தேன். ஆனால், மேற்கொண்டு படிக்க வசதியில்லை. அந்த நேரத்தில்தான் ஆனந்தம் அறக்கட்டளையிடமிருந்து அழைப்பு வந்தது. சென்னைக்குச் சென்று வரக் கூட ஆயிரம் ரூபாய் இல்லாத நிலை! அம்மாவோ பல இடங்களிலும் கையேந்திப் பார்த்தார்; பணம் புரளவில்லை. உடனே நான், 'வேண்டாம்ம்மா, விட்டுவிடுங்கள்... நான் எதாவது வேலைக்குப் போய் பிழைத்துக் கொள்கிறேன்' என்றேன்.

ஆனால், அவர் விடாப்பிடியாக, 'இல்லை இல்லை... நான் எப்பாடு பட்டாவது உன்னைப் படிக்க வைப்பேன்' என்று ஐம்பதும் நூறுமாகச் கடன் வாங்கி என்னைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.'

'ஆனந்தம் அமைப்பின் தயவால் பைசா செலவில்லாமல் ஜிகேஎம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.Image 1628380பட்டமளிப்பு விழாவின் போது, நான் அணிந்திருந்த பட்டமளிப்பு உடையை என் அம்மாவிற்குப் போட்டுப் புகைப்படம் எடுத்தேன். அந்தத் தருணத்தில் என் அம்மா உதிர்த்த சிரிப்பு இருக்கிறதே... அதுதான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த சிரிப்பு! அந்தப் புகைப்படத்தைத்தான் இப்போதும் என் மொபைல் போன் ஸ்கிரீன் சேவராக வைத்துள்ளேன். எப்போது சோர்வு தட்டினாலும், அந்தப் படத்தைப் பார்த்தால் எனக்குள் இமாலய எனர்ஜி வந்துவிடும்.'

'பொறியியல் படித்தாலும், என் மனம் எடிட்டிங் பக்கமே சாய்ந்தது. மொபைல் போன் மூலமாக நான் செய்த சின்ன சின்ன எடிட்டிங் வேலைகளைப் பார்த்த ஆனந்தம் செல்வா அண்ணன், 'சூப்பர் ராஜா' என்று தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அந்த ஒற்றைப் பாராட்டு என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

ஒரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, கணினியை இயக்குவதில் முழுமையான நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இதற்காக நாளொன்றுக்கு 16 மணி நேரம் கூட உழைத்தேன்.

இப்போது 'தி எடிட்டோரியம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி நானே நடத்தி வருகிறேன். இது விளம்பர யுகம்; சிறிய தொழில் செய்பவர்கள் முதல் மருத்துவர்கள் வரை தாங்கள் செய்யும் சேவையை உலகிற்குச் சமூக வலைதளங்கள் மூலம் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அது எப்படி என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். இதன் மூலம் அவர்களும் வளர்கிறார்கள்; எங்களது நிறுவனமும் நாள்தோறும் வளர்ந்து வருகிறது.'

'எங்கள் பத்திரக்கோட்டை கிராமத்தில் உள்ள மண் வீடு, மழை பெய்தால் ஒழுகுவது மட்டுமின்றி, வீட்டுக்குள்ளும் ஆறாக ஓடும். அப்போதெல்லாம் எங்கள் குடும்பமே வீட்டருகே இருந்த நியாயவிலைக்கடை துாணில்தான் படுத்துத் தூங்குவோம். 'நான் மட்டும் நல்ல நிலைக்கு வந்தால், முதலில் செங்கல் வைத்து ஒரு வீடு கட்ட வேண்டும்; அதில் என் அம்மாவை நிம்மதியாக உறங்கச் செய்ய வேண்டும்' என்பது மட்டுமே லட்சியமாக இருந்தது.

இப்போது அந்த லட்சியம் நிறைவேறும் நிலைக்கு வந்துவிட்டது! இதற்கு முழுமுதற்காரணமான ஆனந்தம் அமைப்பிற்கு என் வாழ்நாளெல்லாம் நன்றிக்கடன் பட்டுள்ளேன்' என்று நிஷாந்தன் தழுதழுத்த குரலில் பேசி முடித்தார்.

அவர் பேசி முடித்த சில வினாடிகள் அந்த அரங்கமே பெருமூச்சில் அமைதியில் ஆழ்ந்தது; அடுத்த கணமே, அந்தத் தாயின் தியாகத்திற்கும் மகனின் உழைப்பிற்கும் மரியாதை செலுத்தும் விதமாகப் பலத்த கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது!

நிஷாந்தனுடன் தொடர்பு கொள்வதற்கான மெயில் முகவரி:editornishanthan@gmail.com

-எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us