/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தச்சு கலைஞர்களால் தொடரும் பாரம்பரியம்!
/
தச்சு கலைஞர்களால் தொடரும் பாரம்பரியம்!
PUBLISHED ON : பிப் 16, 2024 12:00 AM

தஞ்சாவூரில் இருந்து, 10 கி.மீ.,யில் உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த, தச்சுக் கலைஞர்களான கணபதி, வைத்திலிங்கம்:
கணபதி: இந்த ஊரில் தச்சு தொழில் செய்யக்கூடிய, 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
எங்கள் முன்னோர்கள், ஊர் மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், தங்களோட அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அகப்பைகள் தயார் செய்து, தை பொங்கல் அன்னைக்கு காலையில் வீடு வீடாகச் சென்று கொடுத்திருக்காங்க.
பல தலைமுறைகளாக இந்த வழக்கம் தொடர்ந்துட்டு இருக்கு. பதிலுக்கு ஊர் மக்கள், எங்களுக்கு மரியாதை செய்வாங்க.
தயார் செய்யப்பட்ட அகப்பைகளை, பொங்கல் அன்னைக்கு காலையில் எடுத்துச் சென்று, ஒவ்வொரு வீடாக கொடுப்போம்.
எங்கள் ஊரில் உள்ள 300 வீடுகளுக்கும் அகப்பை கொடுப்போம்; இதுக்கு நாங்க பணம் வாங்க மாட்டோம். நாங்கள் தயார் செய்யும் அகப்பைகள் தரமாக இருக்கும்.
எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்பாங்க; ஆனால், எங்களுக்கு அது நோக்கமில்லை... இதுவொரு அன்பின் பரிமாற்றம்.
அன்னைக்கு சாயந்தரம், மக்கள் தங்களோட வீடுகளுக்கு எங்களை அழைத்து, ஒரு படி நெல் அல்லது அரிசி, அதோடு தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கரும்பு மற்றும் பழங்கள் கொடுத்து மரியாதை செய்வாங்க.
இந்த ஊரில் உள்ள தச்சு கலைஞர்களுக்கும், மக்களுக்குமான நல்லுறவை புதுப்பிக்க, இது ஒரு வாய்ப்பாக இருக்கு.
ஒரு காலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், மண் பானையில் பொங்கலிட்டு, அகப்பையில் தான் கிண்டுவாங்க. ஆனால், காலப்போக்கில், சில்வர், பித்தளை பாத்திரங்களையும், கரண்டிகளையும் பயன்படுத்த துவங்கி விட்டனர்.
எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளில் சில்வர், பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்தாலுமே, கிண்டுறதுக்கு அகப்பை தான் பயன்படுத்துறாங்க.
இதை பயன்படுத்துறதுனால, பொங்கலில் தனித்துவமான மணமும், சுவையும் உண்டாகும்.
வைத்திலிங்கம்: அகப்பை பயன்படுத்தியதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு.
பெரிய மண் பானையில் பொங்கல் வைக்கும்போது, கனமான கரண்டி பயன்படுத்தி கிளறினால், பானை உடைஞ்சு போறதுக்கான வாய்ப்புகள் அதிகம்.
மண் பானையில் பொங்கல் வைக்குற வழக்கம் படிப்படியாக குறைஞ்சாலும் கூட, அகப்பை பயன்படுத்துறது கைவிடப்படவில்லை.
தச்சு கலைஞர்களால், பாரம்பரியம் தொடர்ந்துட்டு இருக்கு. அடுத்தடுத்த தலைமுறைகளிலும் இது நீடிக்கும்னு நம்புறோம்.
பரஸ்பர அன்பு பரிமாற்றமும், பண்பாட்டு அடையாளமும் தொடரணும் என்பது தான் எங்கள் ஊர் மக்களின் எதிர்பார்ப்பு!