/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மனித கழிவுகளை உரமாக மாற்றும் கழிப்பறைகள்!
/
மனித கழிவுகளை உரமாக மாற்றும் கழிப்பறைகள்!
PUBLISHED ON : மார் 11, 2024 12:00 AM

ஆஸ்திரேலியாவில் மேற்படிப்பு படிக்கக் கிளம்பின இவரை, இப்படி மலைப்பகுதியில் களப்பணி செய்யவிட்டு உள்ளது எது தெரியுமா... சக மனிதர்கள் மேலயும், இந்த பூமி மேலயும் இருக்கிற அவரது அக்கறை தான் என்கிறார் கட்டடக் கலைஞர் விஷ்ணு பிரியா:
கடந்த 2009ம் ஆண்டு கட்டடக்கலை படிப்பை முடிச்சேன். சின்ன வயசுலயிருந்தே கலை, மண் மற்றும் வட்டார கட்டடக் கலைகள் மேல பெரிய ஆர்வம்.
அதனால், சமகாலத்தில் பயன்படுத்துற சிமென்ட், கான்கிரீட் தாண்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த, மண் சார்ந்த கட்டடக் கலைகளைப் பற்றி படிச்சு, பயிற்சி பெற்று, நடைமுறைப்படுத்திட்டு இருக்கேன்.
இடையே, 2015ல் மேற்படிப்புக்கு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிச்சிருந்தேன்; ஆஸ்திரேலியாவில் சீட்டும் கிடைச்சது.
அப்போது தான், சூழலியல் பள்ளியான, 'குக்கூ காட்டுப்பள்ளி'யைச் சேர்ந்த, 'குக்கூ சிவராஜ்' அண்ணாவுடன் ஒரு உரையாடல் நடந்தது.
அப்போது அவர், ஜவ்வாது மலையில், வீடு, பள்ளின்னு எங்கேயும் கழிப்பறை வசதி இல்லாததால் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு குழந்தையைப் பற்றி சொன்னார்... அந்த மரணத்தை என்னால் ஏத்துக்கவே முடியவில்லை.
இந்த, 21ம் நுாற்றாண்டிலும் கழிப்பறை வசதி இல்லாமல் மக்கள் இருக்காங்க என்பதும், ஒரு குழந்தையோட உயிரே பறிபோயிருக்கு என்பதும் எனக்குள்ள ஆற்றாமையையும், கேள்விகளையும், கோபத்தையும் ஏற்படுத்துச்சு. அதில் உருவானது தான், என்னோட, 'மீள்' ஆவணப் படத்துக்கான விதை.
அடிப்படையான கழிப்பறை வசதி, ஏன் எல்லா மக்களுக்கும் கிடைக்கல? அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உள்கட்டமைப்புகளில் என்ன சிக்கல்னு பலவற்றையும் அது பேசணும்னு நினைச்சேன்.
அந்த ஆவணப்படத்துக்கான தேடல்லதான், 'ஹுமனுார் கம்போஸ்டிங் டாய்லெட்' என்று சொல்லப்படுற, நுண்ணு யிரிகளின் உதவி கொண்டு, மனிதக் கழிவுகளை உரமாக மாற்றும் கழிப்பறைகளை பற்றி தெரியவந்தது.
ஆனால், இதையெல்லாம் கட்டடக்கலை படிப்புகளில் முக்கியத்துவம் கொடுத்து ஏன் சொல்லித் தருவது இல்லை என்ற கேள்வி எழுந்தது.
ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள, நெல்லிவாசல் நாடு கிராமத்தில், வனத்துறை உயர் நிலைப்பள்ளியில் சூழல் சுகாதார கழிப்பறைகள் கட்டினோம். அந்த கிராமத்தில் இருக்கிற ஒரே உயர்நிலைப் பள்ளி இது தான்.
இங்க, பழங்குடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், சிறுவர்களுக்கு மட்டும் விடுதி வசதி இருக்கு; ஆனால், கழிப்பறை இல்லை. அவங்களுக்கு பொது குளியல் இடமும், கழிப்பறைகளும், கூட்டு நிதி உதவியால் கட்டிக் கொடுத்தோம்.
என்னோட ஆவணப் படம், இந்த நெல்லிவாசல் கழிப்பறைகள் இது எல்லாம், உயிரிழந்த அந்தக் குழந்தைக்கு சமர்ப்பணம். இன்னொரு உயிர் அதுபோல பறிபோயிடக் கூடாது என்பது தான் லட்சியம்!

