/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பானையை தட்டினால் கோவில் மணி ஓசை வரணும்!
/
பானையை தட்டினால் கோவில் மணி ஓசை வரணும்!
PUBLISHED ON : ஜன 31, 2024 12:00 AM

கன்னியாகுமரி மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுகுமாரன்:
நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 3.5 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது சுங்கான்கடை. ரோட்டின் இருபுறமும், எப்போதும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் சக்கரங்கள் சுழன்றபடி இருக்கும்.
ஆண்கள், சக்கரத்தில் மண்பாண்டங்களை உருவாக்க, பெண்கள் மரக்கட்டையால் தட்டித் தட்டி, பானைக்கு வடிவம் கொடுக்கிறோம்.
இங்கு தயாரிக்கப்படும் பானைகளுக்கு, கேரளாவில் மவுசு அதிகம். திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கோவில் பொங்காலை விழாவுக்கும், தமிழர்களின் பொங்கல் பண்டிகைக்கும் சுங்கான்கடை மண் பானைகள் தான் பிரபலம். நுாறாண்டு கண்ட வியாபாரம் எங்களுடையது.
மலையை ஒட்டி உள்ள குளங்களில் கிடைக்கும் மண், பானை செய்ய மிகவும் உகந்ததாக இருந்தது. அதைப் பார்த்து தான், எங்கள் முன்னோர் இங்கு குடியேறினர்.
மழைக் காலத்தில் மலைகளிலிருந்து அடித்து வரப்படும் மண்ணும், குளத்து மண்ணும் சேர்ந்து எங்கள் பானைக்கு அப்படி ஒரு பலத்தைக் கொடுக்கிறது.
சிறு வயதில் நான் மண்ணைக் குழைக்கிறதுக்கு காலால் மிதிச்சுக் கொடுத்துட்டு தான் பள்ளிக்கூடம் செல்வேன். பானை செய்வதற்கான ஏற்ற பக்குவத்துக்கு வரணும் எனில், மண்ணை இரண்டு மணி நேரம் மிதிக்க வேண்டும்.
தற்போது மண் அரைக்கிற மிஷின் வந்துடுச்சு; அதனால் சிறு கட்டிகள்கூட இல்லாமல் நைசா அரைச்சுக்கலாம்.
முன்பெல்லாம், வண்டல் மண்ணில் ஆற்று மணலைக் கலந்து தான் பானை தயாரிப்போம்; அப்போது தான் பானைக்கு பலம் கிடைக்கும். தற்போது மணல் கிடைக்காததனால், பாறை கிரஷர் துாள் கலந்து செய்கிறோம்.
கையால் தயாரிக்கும் மண்பாண்டங்கள் அத்தனையும் ஒரே அளவில் இருக்கும் என்பது தான் சுங்கான்கடைப் பானையின் சிறப்பு. பானை, சட்டிகளின் மேல் பகுதிகளை மட்டும் தான் சக்கரத்தில் செய்வோம்.
அதன் அடிப்பகுதிகளை மரப்பலகையால் தட்டி வடிவம் கொடுப்போம். சக்கரத்தில் ஒருநாள் உட்கார்ந்தால், 250 பானைகள் வரை ஒருவரால் செய்ய முடியும்.
புதுச் சட்டியை காஸ் ஸ்டவ்வில் வைத்துச் சமைக்கும்போது, முதலில், 'சிம்'மில் வைத்துப் பயன்படுத்தணும்.
முதல் சமையலிலேயே எண்ணெய் ஊற்றிச் சமைக்காமல், ஆரம்பத்தில் குழம்பு வைக்கும் போது சட்டி பழகிவிடும்; அதன் பின், எல்லாச் சமையலும் செய்யலாம்.
பொங்கல் தவிர, மார்கழி, மாசி மாதங்களில் கோவில் விழாக்களும் நடக்கும் என்பதால், பானை அதிகமாக விற்பனை ஆகும். நல்ல பானைன்னா கையால் தட்டிப் பார்த்தாலே, கோவில் மணி ஓசை வரும். வேகாமல் இருந்தாலோ அல்லது ஓட்டை விழுந்த பானை எனில் சத்தம் வித்தியாசப்படும்.