/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்!
/
நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்!
PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

சென்னை வளசரவாக்கத்தில், 'பி.ஆர்.மோட்டார்ஸ்' என்ற கடையை நடத்தும், தமிழகத்தின் முதல் பெண் கார் மெக்கானிக் புஷ்பராணி:
என் அக்கா பையனுக்காக, இந்த மெக்கானிக் ஷெட்டை வைத்துக் கொடுத்தேன். கொரோனா காலத்தில் இதை பார்த்துக் கொள்ள முடியாமல், பாதியில் விட்டுச் சென்று விட்டான்.
நாமே ஏன் மெக்கானிக் ஆகக்கூடாது என்று தோன்றவே, இணையதளத்தில் அதுகுறித்து தேடினேன்.
தமிழகத்தில் பெண் கார் மெக்கானிக் எவருமில்லை என்று தெரிந்ததும், 'அந்த முதல் பெண்ணாக நான் ஏன் இருக்கக் கூடாது' என்று தோன்றியது. அதன்பின், ஒரு மெக்கானிக்கிடம் வேலை கற்று, ஷெட்டை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.
இப்போது, கார்கள் குறித்து எனக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்ற அளவுக்கு, 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட்டேன்.
ஆனாலும், மெக்கானிக் ஆன புதிதில் யாருமே என்னை நம்பி வண்டியை கொடுக்காததால், வருமானமே இல்லை. மூன்று வேளை சாப்பிடுவதே சவாலாக இருந்தது. ஆனாலும், ஒருநாள் ஜெயி ப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.
அப்போது தான், எனக்கு ஒரு பெண் வாடிக்கையாளர் கிடைத்தார். தன் கார் பிரேக் டவுன் ஆகி விட்டது என்று, என்னை நம்பி காரை கொடுத்தார். உடனே அதை சரிசெய்து கொடுத்ததும், அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.
என்ன தான் விருப்பப்பட்டு இந்த வேலையை தேர்ந்தெடுத்தாலும், இதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது சில சமயங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
எனக்கு ஏற்கனவே முதுகுவலி பிரச்னை இருக்கிறது. அந்த வலியுடன், இந்த வேலையை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் மிகவும் கஷ்டப்படுவேன். உடலளவில் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதாலேயே பெண்கள் இந்த வேலைக்கு வருவதில்லை. அதையெல்லாம் மீறி, இந்த வேலையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் என்னை தொடர்ந்து ஓட வைக்கிறது.
ஒருமுறை, தேர்வு எழுதச் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களின் வேன் பாதி வழியில் நின்று விட்டது. அப்போது எனக்கு தகவல் வந்தது. உடனே சென்று சரிசெய்து கொடுத்து, பிள்ளைகளை சரியான நேரத்திற்கு பள்ளிக்கு அனுப்பி வைத்தேன்.
சமீபத்தில் தான், டாடா மோட்டார்ஸ் நிறுவ னத்தின் அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக் ஷாப்பாக என் ஷெட்டை தேர்வு செய்திருக்கின்றனர். இந்த உற்சாகத்தில் இன்னும் உழைக்கணும்.
வெறும் ஷெட்டாக மட்டுமே இல்லாமல், இதை ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும். நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பல கனவுகளுடன் ஓட ஆரம்பித்திருக்கிறேன்!