/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கடவுள் சன்னதியில் பாடும் பாக்கியம் கிடைத்தது பெரும் பேறு!
/
கடவுள் சன்னதியில் பாடும் பாக்கியம் கிடைத்தது பெரும் பேறு!
கடவுள் சன்னதியில் பாடும் பாக்கியம் கிடைத்தது பெரும் பேறு!
கடவுள் சன்னதியில் பாடும் பாக்கியம் கிடைத்தது பெரும் பேறு!
PUBLISHED ON : ஆக 05, 2025 12:00 AM

சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் திருக்கோவிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ள, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பிரியவதனா: நான் பிறக்கும்போதே , 650 கிராம் எடையுள்ள குழந்தையாகத் தான் பிறந்தேன்.
மேலும் விழித்திரை விலகலால், பார்வையும் இல்லை என்று தெரியவந்தது; ஆனால், என் பெற்றோர் கலங்கவில்லை.
'கடவுள் எங்களுக்கு தந்த இந்த தேவதையை சிறந்தவளாக வளர்ப்பதே எங்கள் கடமை' என்று உறுதியேற்றனர்.
பார்வைத்திறன் இல்லை என்றாலும், சிறு வயது முதலே இசையை ரசிக்கத் துவங்கிய நான், கேட்கும் பாடல்களை அப்படியே நினைவில் வைத்திருந்து, பாடும் திறன் பெற்றிருந்தேன்.
இதை கண்ட பெற் றோர், என் இசை ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்க எண்ணினர். எனவே, அருகில் இருந்த நடனம் மற்றும் இசை பள்ளிகளில் சேர்த்து பயிற்சி தந்தனர்.
பள்ளி படிப்பை முடித்ததும், தமிழக இசை கல்லுாரியில், இசை கலைமணி படிப்பில் டிப்ளமாவும், இசை ஆசிரியருக்கான பயிற்சியில் இளங்கலை பட்டமும் பெற்றேன்.
அடுத்ததாக, ஓதுவார் பணி குறித்து அறிந்து, அதற்கான தேடல்களில் இறங்கினேன். அதற்கு முன்னரே தேவாரம், திருவாசகம் பாடல்களை நான் கற்றிருந்தாலும், மேலும் மேலும் அதில் பயிற்சி செய்தேன்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சென்னை மயிலாப்பூர் கிளையில் பயிற்சிகள் பெற்றேன். அது மட்டு மல்லாமல், அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தினேன்.
பின் தான், ஓதுவார் பணிக்கு முறைப்படி விண்ணப்பம் அளித்தேன். நேர்காணலில் தேர்வு பெற்று, பணி நியமன ஆணையை பெற்றேன்.
ஓதுவார் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே இப்போதைக்கு என் எண்ணம்.
என்னை போன்று மாற்றுத்திறன் உள்ள வர்களின் திறமைகளை முடக்காமல் ஊக்குவிப்பது, இந்த சமூகத்தில் அவர்களையும் மதிப்புமிக்கவர்களாக மாற்றும். இதற்கு என் பெற்றோரே உதாரணம்.
பள்ளி, கல்லுாரி என, நான் படித்த அத்தனை ஆண்டுகளிலும் ஒரு நாள் விடாமல், காலை முதல் மாலை வரை அங்கேயே காத்திருந்து என்னை அழைத்து வருவார் அம்மா. என் அப்பாவும், தம்பியும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
என் பெற்றோர், இசையை பிரியமுடன் எனக்கு கற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் என் பாடலை ரசித்து கேட்கும் பார்வையாளர்கள் என அனை வருக்கும் நன்றிகள்.
ஏராளமான பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளேன். கடவுள் சன்னதியில் பாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெரும் பேறு!