/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தேனீ வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்குது!
/
தேனீ வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்குது!
PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

முருங்கைத் தேன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து கூறும், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள, சிறுத்தொண்டநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த அசோக்:
நான், பிளஸ் 2 வரை படித்து விட்டு, விவசாயத்தில் இறங்கி விட்டேன்.
என் அப்பா, 'விவசாயமாக இருந்தாலும் சரி அல்லது வேற எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சரி... நாம் உற்பத்தி செய்யக்கூடிய பொருள், இருப்பு வைத்து விற்பனை செய்யக் கூடியதாக இருந்தால் தான், அதிக நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும்; விற்பனை செய்யவும் எளிதாக இருக்கும்' என்பார்.
அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன. தேனீ வளர்ப்பு தொழில் தான், பல வகைகளிலும் எனக்கு ஏற்றதாக இருக்கும் என, தோன்றியது.
என் குடும்பத்திற்கு சொந்தமான, 5 ஏக்கர் முருங்கைத் தோட்டத்திலும், அப்பகுதியில் உள்ள பிற விவசாயிகளின் தோட்டங்களிலும், தேனீ பெட்டிகள் அமைத்து, முருங்கைத் தேன் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன்.
முருங்கை தேனின் சுவை, தனித்துவமாக இருக்கும். இதை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம்; வெண்மை நிறத்திலும், கெட்டித் தன்மையாகவும் இருக்கும்.
எங்கள் பகுதியில் தென்னை, முருங்கை விவசாயம் அதிகம்.
முதல்கட்டமாக, 10 பெட்டிகள் வைத்து, தேனீ வளர்க்க துவங்கினேன். அதில் கணிசமான அளவு தேன் கிடைத்தது. பின், மற்ற விவசாயிகளின் முருங்கைத் தோட்டத்திலும் தேன் சேகரித்து வருகிறேன்.
தேனீக்கள் இருந்தால், பயிர்களில் மகரந்தச் சேர்க்கை நன்கு நடந்து, மகசூல் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து, தங்கள் தோட்டங்களில், தேனீப் பெட்டிகள் அமைக்க அழைப்பு விடுகின்றனர்.
கடந்த, 6 ஆண்டுகளாக, தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். கிட்டத்தட்ட, 450 பெட்டிகள் அமைத்து, தேன் சேகரிக்கிறேன்.
ஒரு ஆண்டில், 6 மாதங்களுக்கு, 450 பெட்டிகள் வாயிலாக குறைந்தபட்சம், 2,700 கிலோ தேன் கிடைக்கிறது. 1 கிலோ, 500 ரூபாய் என்று விற்பனை செய்வதன் வாயிலாக, 13 லட்சத்து, 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
தேனீப் பெட்டிகள் பராமரிப்பு, தேன் பிரித்தெடுப்பது, 'பேக்கிங்' போக்குவரத்து உட்பட எல்லா செலவுகளும் போக, 9 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.கழிவுகளாக கிடைக்கக்கூடிய மெழுகை விற்பனை செய்வதன் வாயிலாகவும் வருமானம் பார்க்கலாம்.
அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தேன் மெழுகை பயன்படுத்துகின்றன. 6 மாதங்களில் பெட்டிக்கு, 1 கிலோ வீதம் மெழுகு கிடைக்கும். 1 கிலோவுக்கு, 400 ரூபாய் வீதம், 450 பெட்டிகள் வாயிலாக, 1 லட்சத்து, 80,000 ரூபாய் கூடுதல் வருமானமாக கிடைக்கிறது!
தொடர்புக்கு:
94887 19728