/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மாதத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு மேல் 'டர்ன் ஓவர்' செய்கிறோம்!
/
மாதத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு மேல் 'டர்ன் ஓவர்' செய்கிறோம்!
மாதத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு மேல் 'டர்ன் ஓவர்' செய்கிறோம்!
மாதத்துக்கு ரூ.7 லட்சத்துக்கு மேல் 'டர்ன் ஓவர்' செய்கிறோம்!
PUBLISHED ON : ஜன 04, 2024 12:00 AM

விழுப்புரம் மாவட்டம், தென்னமாதேவி கிராமத்தில் உள்ள, 'கலைமகள் சுடுமண் சிற்பக்குழு' தலைவி மலர்விழி:
நாலு பொம்பளைங்க ஒண்ணா சேர்ந்தா சண்டை வரும்னு சொல்வாங்க... நாங்க மொத்தம், 91 பேர் இருக்கோம். இதுவரை சண்டையே போட்டதில்லை.
இந்த தொழில் தான், எங்க தலையெழுத்தை மாற்றி இருக்கு.
எங்களில் பலர் பள்ளிப் படிப்பை கூட முடிக்காதவர்கள். ஆனால், இன்று லட்சங்களில், 'டர்ன் ஓவர்' செய்கிறோம். நாங்கள் தயாரிக்கும், களிமண் கலைப் பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனைக்கு செல்கின்றன.
நாங்கள் எல்லாரும் வெவ்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருந்தோம். 2020ல், மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்காக, களிமண் கலைப் பொருள் பயிற்சியை அரசு கொடுத்தது.
அதில் வெவ்வேறு குழுக்களை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர். அந்த பயிற்சியில் பொம்மை தயாரிப்பு, மார்க்கெட்டிங் டெக்னிக் என, நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். பயிற்சி எடுத்துக் கொண்ட, நாங்கள் 20 பேர் சேர்ந்து இக்குழுவை துவக்கினோம்.
மண் பொம்மை செய்றது சாதாரண விஷயமில்லை... மண்ணை மிதிச்சு பக்குவப் படுத்தணும், சுத்தப்படுத்தணும், அரைக்கணும், அச்சு போட்டு காய வைக்கணும், பெயின்ட் அடிச்சு விற்பனைக்கு அனுப்பணும்.
திட்டமிட்டு செய்தால் தான், 365 நாளும் நமக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி, தொழில் பண்ண முடியும். மண்ணை கரைக்கிற மிஷின், மண் பிசையும் மிஷின்களை வாங்கினோம்.
வியாபாரிகள் புதுப்புது மாடல்கள் கேட்டனர். அதனால், மற்ற குழுக்களில் இருந்த பெண்களையும், எங்கள் தொழிலில் சேர்த்துக் கொண்டோம். இப்போது, 100 வகையான பொருட்கள் தயார் செய்கிறோம்.
குழு ஆரம்பித்த புதிதில், நிறைய சிரமங்கள் இருந்தன. 'ஆர்டர்' வாங்குவதற்காக கடை கடையாக ஏறி இறங்கி இருக்கிறோம்.
அப்புறம் ஸ்டால்கள் போட்டது வாயிலாக, தமிழகத்தில் இருக்குற மொத்த வியாபாரிகள், எங்களுடைய பொருட்களை வாங்க ஆரம்பித்தனர்.
கிடைத்த லாபத்தை தொழிலில் மீண்டும் முதலீடு செய்தோம். மாதம், 7 லட்சத்திற்கு மேல், 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.
மற்ற பெண்கள் தயார் செய்யும் பொருட்களையும் குழு வாயிலாக விற்பனை செய்கிறோம். சின்னச் சின்ன பணத் தேவைகளை எங்களுக்குள்ளேயேபூர்த்தி செய்து கொள்கிறோம்.
எங்கள் குடும்பத்திற்கான பணத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம். மொத்தத்தில் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எங்க மேல மதிப்பும், மரியாதையும் கூடியிருக்கு.
தொடர்புக்கு:
80569 48612