
'ஒலியற்றவர்களின் ஒலி நான்!'
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தமிழகத்தின் முதல் வழக்கறிஞர் ஷபானா: என் சொந்த ஊர் சென்னை. அப்பா தபால் துறையில் வேலை பார்க்கிறார். எனக்கு பெயர் வைத்த போது, என்னை அவரின் நெருங்கிய நண்பர் ஜோசப் மடியில் உட்கார வைத்து, பெயர் வைத்தனர். அவருக்கு பிறவியிலேயே காது கேட்க, வாய் பேச முடியாது. ஆனாலும், தன் மடியில் உட்கார வைத்து, கண்கள் கலங்க, தன் மனதால், என் பெயரை சொல்லும் போது தான், ஒலியற்ற மனிதர்களுக்கும், எனக்குமான முதல் இழை பின்னப்பட்டிருக்கும்.
நான், என் வீட்டில் இருந்ததை விட, ஜோசப் வீட்டில் தான் அதிகம் இருந்தேன். அதனால், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளின் சைகை மொழி பரிச்சயமாகிவிட்டது. பிளஸ் 2 முடித்து, சட்டம் படித்தேன். சென்னை ஐகோர்டில், ஒரு வக்கீலிடம் ஜூனியராக இருந்த போது, ஒரு முறை கோர்ட்டுக்கு சென்றேன். வழக்குரைக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபரிடம், நீதிபதிகள் கேள்விகள் கேட்க, அவர் பதில் சொல்லவில்லை. அவர் வாய் பேச இயலாதவர் என்று, அப்போதுதான் புரிந்தது. உடனே, நீதிபதிகளிடம் அனுமதி கேட்டு, அவருக்காக சைகைகளை மொழி பெயர்க்க, அவருக்கு நீதி கிடைத்தது. அதிலிருந்து, காது கேட்க, வாய் பேச இயலாதவர்களின் வழக்குகள் கோர்ட்டில் வரும்போதெல்லாம், என்னை அவர்களுக்கான வக்கீலாக வாதாட கோர்ட்டே பரிந்துரைக்கும். இப்படி, அவர்களுக்கான என் தொடர் பங்களிப்பை அங்கீகரிக்க, கோர்ட்டே என்னை காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்கான வக்கீலாக நியமித்தது.