/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பலவீனமான மக்களின் சமூகத்திற்காக உழைக்கிறேன்!
/
பலவீனமான மக்களின் சமூகத்திற்காக உழைக்கிறேன்!
PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

நக்சலாக இருந்து, ஜனநாயக பாதைக்கு திரும்பி, தற்போது தெலுங்கானா காங்., அரசில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பதவி வகிக்கும் அனசுயா தன்சாரி:
கடந்த 1971ல், ஜக்கன்னாபேட் கிராமத்தில் சம்மக்கா - சம்மையா பழங்குடியின தம்பதிக்கு மகளாக பிறந்தேன். அரசு விடுதியில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தேன். நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட தரப்படாமல், என் இன மக்கள் நசுக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழுந்தேன்.
கடந்த 1988ல் சி.பி.ஐ., ஜனசக்தி கட்சியில் சேர்ந்து நக்சல் ஆனேன். துப்பாக்கி ஏந்தி ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டேன். என் ஆயுதக்குழுவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 1997ல் அதிலிருந்து வெளியேறி, பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, நீதிமன்றத்தில் சரணடைந்தேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நீதிமன்றங்களில் வாதாட முடிவு செய்து, சட்டக் கல்லுாரியில் பட்டம் பெற்று, வழக்கறிஞராக பணியைத் துவங்கினேன். மாற்றத்தை ஏற்படுத்த அதிகாரம் அவசியம் என நினைத்தேன். இதனால், தேர்தல் பாதையை தேர்வு செய்தேன்.
பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினேன். கொரோனா லாக்டவுன் காலத்தில் என் முலுகு தொகுதியில் தொடர்ந்து, 100 நாட்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வழங்கினேன்.
மருத்துவ உதவி தேவைப்பட்டோருக்கு ஓடோடி உதவினேன். இதன் வாயிலாக, மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்று அவர்களின் அன்புக்குரியவள் ஆனேன். இதனால், என்னை அன்புடன் சீதாக்கா என்றே அழைத்தனர்.
அரசியலுக்கு வந்த பின்னும் என் படிப்பை தொடர்ந்தேன். சட்டத்தில் பட்டம் பெற்ற பின், உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில், பழங்குடியினரை பற்றி ஆய்வு மேற்கொண்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
இப்போது நீங்கள் என்னை டாக்டர் அனசுயா சீதாக்கா என்று அழைக்கலாம். 2023ல் மீண்டும் முலுகு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டேன். அதில் வெற்றி பெற்று, என் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லை பதித்தேன்.
எந்த மக்களுக்காக, என் அரசியல் பயணத்தைத் எம்.எல்.ஏ.,வாக துவங்கினேனோ அதே மக்களுக்காக தற்போது அமைச்சராகவும் பதவியேற்றுள்ளேன்.
துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் சரி, துப்பாக்கி ஏந்தியவர்களுடன் இருந்தாலும் சரி, அது பலவீனமானவர்களின் சமூகத்திற்காக, அவர்களின் வாழ்விடத்திற்காக, அவர்கள் உடுத்தும் உடைக்காக மட்டுமே... என்பதை உரக்கச் சொல்வேன்.

