PUBLISHED ON : மார் 24, 2026 01:50 AM

மூடும் அபாயத்தில் இருந்த அரசு பள்ளியை மேம்படுத்தியுள்ள, கரூர் மாவட்டம், வடுகப்பட்டி துவக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும், 41 வயதாகும் குப்புலட்சுமி:
கடந்த, 2014 முதல் இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறேன். பள்ளிக்கு முதலில் வந்தபோது, மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது. மூன்று குழந்தைகளுடன் மூடும் நிலையில் பள்ளி இருந்தது. அது எனக்கு மிகுந்த கவலையை கொடுத்தது.
மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகவும், அரசு பள்ளியை ஆங்கில பள்ளிக்கு இணையாக மாற்றுவதற்காகவும் என்னால் ஆன முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். தற்போது, 15 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கணினி திரை வாயிலாக கல்வி கற்பித்து வருகிறேன். பள்ளியில் மூலிகை தோட்டம், காய்கறி தோட்டம் மற்றும் பல்வேறு வகை மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம்; அவற்றை மாணவர்களே பராமரிக்கின்றனர். தோட்டத்தில் கிடைக்கும் காய்கறிகளை, பள்ளியில் காலை சிற்றுண்டிக்காக பயன்படுத்திக் கொள்கிறோம்.
கற்றல் செயல்பாடுகளில் சிறப்பாக இருக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு பென்சில், பேனா, வண்ண பென்சில்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கி ஊக்குவிக்கிறேன்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' மற்றும் ராக்கெட் ஏவுதளமான ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்று, செய்தித்தாளில் அந்த செய்திகளை இடம் பெற செய்து வருகிறேன்.
மாவட்ட அளவில் நடக்கும் பள்ளி விழாக்களில் மாணவர்களை பங்கேற்க செய்து, பரிசுகள் பெற வைக்கிறேன். என் மாணவர்களின் படைப்புகளை, 'எண்ணும் எழுத்தும்' என்ற பெயரில், சமூக வலைதளங்களில் ஒன்றான, 'டெலிகிராம்' குழுவில் அதிக முறை இடம் பெற வைத்துள்ளேன்.
வாயில் மேலண்ணம் ஒட்டி இருந்த, பேச்சுத்திறன் குறைவாக இருந்த இரு குழந்தைகளுக்கு, மருத்துவ சிகிச்சை உதவி; கண் பார்வை குறைபாடு, திக்குவாய் குறைபாடு உள்ள குழந்தைகளின் உடல் குறைபாட்டை சரி செய்ய உதவி என, என் வருவாயில் மாணவர்களின் பிரச்னைகளை தீர்த்து வருகிறேன்.
சமூகத்தின் தற்போதைய பிரச்னைகளான சைபர் கிரைம், 'போக்சோ' சட்டம், போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த காணொளிகள் தயாரித்து, மாணவர்களிடமும், மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
'அறம்' நல்லாசிரியர் விருது உட்பட, 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன். இப்போது எங்கள் ஊரில் உள்ள, 10 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுமே எங்கள் பள்ளியில் தான் படிக்கின்றனர் என்பது தான், எனக்கு கிடைத்திருக்கும் விலைமதிக்க முடியாத விருது.
தொடர்புக்கு: 94866 45870
