/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முயற்சி, தேடல் இருந்தாலே வெற்றி உறுதி!
/
முயற்சி, தேடல் இருந்தாலே வெற்றி உறுதி!
PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

வீடுகளுக்கு தேவையான, 'எலக்ட்ரிக்கல், பிளம்பிங்' போன்ற பணிகளை செய்து தரும், 'குட் டைம் சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளரான வேலுாரைச் சேர்ந்த சுரேந்தர்:
இந்த பிசினசை துவங்குவதற்கு முன், கூரியர் கம்பெனி மற்றும் புட் டெலிவரி பாயாக வேலை பார்த்தேன். என்னுடன் பள்ளியிலும், கல்லுாரியிலும் படித்த நண்பர்கள் பலர், 'ஏசி மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பிளம்பிங்' என, பல துறைகளிலும் இருந்தனர்.
நான் டெலிவரி செய்யும் வீடுகளில் எல்லாம் மெக்கானிக், பிளம்பிங் போன்ற வேலைகளுக்கு அதிகமான, 'டிமாண்ட்' இருப்பதும், ஆனால், சரியான நேரத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை என்பதும் தெரியவந்தது.
அப்போது தான், 'வாடிக்கையாளர்களையும், டெக்னீஷியன்களையும் ஒருங்கிணைக்கும் வேலையை, ஒரு பிசினசாக ஏன் துவங்க கூடாது' என்ற யோசனை வந்தது. நான் வேலை பார்த்த தனியார் கம்பெனியில் கிடைத்த பி.எப்., பணத்தில் இருந்து கணிசமான தொகையை முதலீடாக வைத்து, 'குட் டைம் சர்வீஸ்' துவக்கினேன்.
முதலில் வீடுகளை கிளீன் செய்வதற்கான தேவை அதிகமாக காணப்பட்டது. முகநுாலில், வீடுகள் கிளீனிங் சேவைகள் குறித்து பதிவிட்டேன். நிறைய வாடிக்கையாளர்கள் வர துவங்கினர். அதன்பின், கார்டன் கிளீனிங், பார்சல் டெலிவரி, வாட்டர் டேங்க் கிளீனிங், பாத்ரூம் கிளீனிங், வீடு தேடி வந்து கார் வாஷ் செய்து தருதல் போன்ற, 10க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்க ஆரம்பித்தேன்.
இன்று, 30க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். கல்லுாரி படித்தபடியே பகுதி நேரமாக சம்பாதிக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் என் நிறுவனத்தின் வாயிலாக வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன்.
மேலும், வேலுார் மாவட்டத்தில் காட்பாடி, சத்துவாச்சாரி, பாகாயம், சேண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் தயாரித்த உணவுகளை, மதிய நேரங்களில் வாடிக்கையாளர்கள் சொல்லும் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் எடுத்து சென்றும் கொடுத்து வருகிறோம். அதேபோல் கூரியர் சேவைகளையும் நடத்தி வருகிறோம்.
ஆரம்பத்தில், 10க்கு 10 சதுர அடியில், சிறிய அளவில் துவங்கிய இந்நிறுவனத்தை ஆரம்பித்து, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, எட்டு இடங்களில் கிளைகளுடன், ஆண்டுக்கு, 75 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது. இப்போது வரும் வருமானத்தில், 50 சதவீதத்தை என் பிசினசில் திரும்பவும் முதலீடாக வைக்கிறேன்.
நம் லட்சியமும், நோக்கமும் தெளிவாக இருந்தாலே போக போக தானாக கற்றுக் கொள்வோம். முயற்சியும், தேடலும் இருந்தாலே போதும்... ஒருநாள் பெரிய அளவில் வெற்றி அடையலாம்.