/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பன்றி வளர்ப்பில் கிடைத்த லாபத்தில் சூப்பர் மார்க்கெட்!
/
பன்றி வளர்ப்பில் கிடைத்த லாபத்தில் சூப்பர் மார்க்கெட்!
பன்றி வளர்ப்பில் கிடைத்த லாபத்தில் சூப்பர் மார்க்கெட்!
பன்றி வளர்ப்பில் கிடைத்த லாபத்தில் சூப்பர் மார்க்கெட்!
PUBLISHED ON : ஆக 02, 2025 12:00 AM

வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் லாபம் பார்த்து வரும், தர்மபுரி மாவட்டம், கேத்துரெட்டிப்பட்டியைச் சேர்ந்த யுவராஜ்குமார்:
என் அப்பா விவசாயி. நான், பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன், எம்.ஏ., ஜர்னலிசம் படித்துள்ளேன். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையால் சொந்த ஊர் திரும்பினேன்.
ஆட்டு பண்ணை அல்லது மாட்டு பண்ணை துவங்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், வெண்பன்றிக்கு அதிக விற்பனை வாய்ப்புகள் இருக்கிறது என்பதை கேள்விப்பட்டு, அப்பாவிடம் கூறியதும், எந்தவித மறுப்பும் கூறாமல் அனுமதித்தார்.
எங்களுக்கு சொந்தமான நிலத்தில், 1,800 சதுர அடி பரப்பில், 8 லட்சம் ரூபாய் செலவு செய்து காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்குற மாதிரி கொட்டகை அமைத்தேன். அரசு கால்நடை பண்ணையில் இருந்து, 40 பன்றி குட்டிகளை, 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்.
தற்போது, 60 தாய் பன்றிகளும், ஆறு கிடா பன்றிகளும் வளர்க்கிறேன். பன்றிகள் பசியாற உணவு கழிவுகளும், இலைகளும் போதுமானது. நன்கு திடகாத்திரமாக வளர, கடைகளில் விற்கப்படும் அடர் தீவனத்தை ஒரு தாய் பன்றிக்கு, 4 கிலோ வீதம் கொடுக்கிறேன். குட்டிகள் தாய்ப் பால் குடித்து வளர்ந்து விடும்.
வரும் முன் காப்போம் நடவடிக்கையாக, கால்நடை மருத்துவர் வாயிலாக பன்றிகளுக்கு தடுப்பூசியும் போடுகிறேன். ஒரு தாய் பன்றி வாயிலாக, ஆறு மாதத்திற்கு ஒரு முறை குறைந்தபட்சம் எட்டு குட்டிகள் கிடைக்கும். 60 தாய் பன்றிகள் வாயிலாக ஆண்டுக்கு, 960 குட்டிகள் கிடைக்கும்.
இதில், 860 குட்டிகளை இரண்டு மாதம் வரை வளர்த்து, 15 - 20 கிலோ எடையிலான ஒரு குட்டி, 7,000 ரூபாய் என விற்பனை செய்கிறேன். ஆண்டுக்கு, 860 குட்டிகள் விற்பனை வாயிலாக, 60 லட்சத்து 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
மீதமுள்ள, 100 குட்டிகளை ஒன்பது மாதம் வரை வளர்ப்பேன். பன்றி இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள், ஆந்திர மாநிலத்தில் செயல்படுகின்றன. அங்கு, 1 கிலோ உயிர் எடை, 150 ரூபாய் என, 100 பன்றிகள் விற்பனை வாயிலாக, 15 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.
குட்டிகள் விற்பனை மற்றும் இறைச்சி பன்றிகள் விற்பனை வாயிலாக, ஓராண்டுக்கு, 75 லட்சத்து 20,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அனைத்து செலவுகளும் போக, 40 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. இத்தொழிலில் கிடைத்த லாபத்தில், ஒரு சூப்பர் மார்க்கெட் துவங்கி இருக்கிறேன்.
தொடர்புக்கு
63790 61223