/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆசிரியர்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்!
/
ஆசிரியர்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்!
PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்., சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வரும், இந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான ரேவதி பரமேஸ்வரன்: பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எதை செய்தாலும், அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே செயல்படுவேன்.
கணித பாடம் தொடர்பாக பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறேன். இது, ஆசிரியர்கள் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்தவும், சமீபகால தொழில்நுட்ப மாறுதல்களுக்கு தயார்படுத்தி கொள்ளவும் உதவுகின்றன.
விதவிதமான கற்பித்தல் முறைகளையும், அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறேன்.
ஆசிரியர்கள், எப்போதும் கற்பவர்களாகவே இருக்க வேண்டும்; புதிதாக தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். மாணவ - மாணவியரும் அறிவார்ந்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு புதுமையான வழிகளில் கல்வி புகட்ட, தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி என்பது மனப்பாடம் செய்வதாக இருக்கக் கூடாது; கற்றுக்கொள்ளும் பாடத்தை செயல்முறைப் படுத்துவதாகவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். சிறந்த, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தான், ஒரு பள்ளியின் முன்னேற்றத்திற்கு அடிப்படை.
ஆசிரியர்கள், தங்கள் தொழிலை மிகவும் நேசிக்க வேண்டும். அவ்வப்போது தங்கள் கல்வி அறிவையும், தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான், 'தேசிய நல்லாசிரியர்' விருதை, ஜனாதிபதி முர்மு கைகளால் பெற்றதுடன், பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்திலும் பங்கேற்றேன்.
இதற்கு முன், அமெரிக்காவில், 'புல் பிரைட்' என்ற நல்லாசிரியர் விருது பெற்றபோது, அங்கு நான்கு மாதங்கள் தங்கி, பல நாட்டு ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பும், புதிய அனுபவமும் கிடைத்தன. இந்த இரண்டு நிகழ்வுகளும் என் வாழ்வில் மறக்க முடியாதவை.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பின், சமூகத்தில் எனக்கு பொறுப்பு அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். 'நம்மால் முடிந்ததை சமூகத்திற்கு செய்ய வேண்டும்' என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது.
ஆசிரியர் சமூகத்திற்கே இந்த விருது கிடைத்ததாக நினைக்கிறேன். முழுமையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் நம் வேலையை சிறப்பாக செய்தால், விருதுகள் நம்மை தேடி வரும் என்று நம்புகிறேன்.
அடுத்து, நகர்ப்புற, மாண வ - மாணவியருக்கு முகாம் நடத்தி, 'ஒலிம்பியாட்' கணித திறனாய்வு தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது!