/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மத்திய அரசு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது!
/
மத்திய அரசு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது!
PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, 'பியாண்ட் சஸ்டெய்னபிலிட்டி' என்ற நிறுவனத்தின் உரிமையாளரான, கோவையைச் சேர்ந்த ஹரி பிரசாத்: நான், வீட்டிற்கு ஒரே மகன். பிளஸ் 2 முடித்துவிட்டு, 'எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன்' படித்தேன்.
ஆங்கில, 'டாக்குமென்டரி' படம் ஒன்றை பார்த்தது தான், என் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ஐ.நா.,வின் காலநிலை மாற்ற துாதுவராக இருந்த லியோனார்டோ டிகாப்ரியோ என்ற ஹாலிவுட் நடிகர், உலகெங்கும் பயணித்து, காலநிலை மாற்றம் குறித்து பேசுவதும், ஆய்வு செய்வதும் தான் அந்த ஆவணப்படம்.
காலநிலை குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதே மனதில் பதிந்தது. கல்லுாரி படிப்பு முடித்ததும், நெதர்லாந்து நாட்டிற்கு சென்று காலநிலை மாற்றம் குறித்து, எம்.எஸ்., படித்து இந்தியா திரும்பினேன்.
காலநிலை மாற்றத்திற்கு பெரிய காரணம், கார்பன் உமிழ்வு. வாகனங்களில் ஆரம்பித்து, 'ஏசி' வரை எல்லாமே கார்பனை உமிழ்கின்றன. கார்பன் அளவை குறைப்பது தான் இன்றைய காலத்தின் தேவை.
இது சம்பந்தமான பிசினஸ் ஆரம்பித்தால், எதிர்காலம் நன்றாக இருக்கும் என புரிந்தது. ஆனால், பிசினஸ் செய்வது மட்டுமின்றி, சமூகத்திற்கும் ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும், இந்த நிறுவனத்தை துவங்கினேன்.
அதனால், லாபம், நஷ்டம் குறித்து கவலைப்படவில்லை. எங்களது முதல் வாடிக்கையாளர், சென்னை மணலியில் இருக்கும் ஒரு பெட்ரோ கெமிக்கல் கம்பெனி. எங்கள் வேலை, நிறுவனம் வெளியிடுகிற கார்பன் உமிழ்வை கணக்கிட்டு, அதை குறைக்க வழி உருவாக்குவது தான்.
நிறைய அறிவியல் பூர்வமான அளவீட்டு முறைகளை பயன்படுத்தி, அந்நிறுவனத்தின் கார்பன் அளவை, 'ஜீரோ நெக்' அளவுக்கு கொண்டு வந்தோம். இது, பரவலான அறிமுகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியது.
தொடர்ந்து பல, 'புராஜெக்ட்'கள் வர, இன்று ஒரு நம்பிக்கையான இடத்தில் வந்து நிற்கிறோம். தற்போது கோவை மாவட்டத்திலும், சென்னையிலும் அலுவலகங்கள் இயங்குகின்றன.
எங்கள் நிறுவனம் இதுவரை, 9.35 லட்சம் டன் கார்பனை அளவிட்டு உள்ளது; 1.61 லட்சம் டன் கார்பனை குறைக்க திட்டம் வகுத்து தந்துள்ளது.
இந்த துறையில் நிறைய, 'எக்ஸ்பர்ட்ஸ்' தேவை. அதற்காக, 'கிளைமேட் எஜுகேஷன்' குறித்து சொல்லி கொடுக்கிற ஒரு பள்ளியை துவங்கி இருக்கிறோம்.
எங்கள் பணியை கவனித்த, மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப்' இந்தியா நிறுவனம், ஊக்கத்தொகையாக, 25 லட்சம் ரூபாய் தந்து உற்சாகப்படுத்தியது. தமிழக அரசின் துாய்மை மிஷனில் நாங்களும் ஒரு அங்கமாக இணைந்து இருக்கிறோம்.
தொடர்புக்கு: 84894 46638