/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என்னை தொழிலதிபராக்கிய நாட்டுக்கோழி முட்டை!
/
என்னை தொழிலதிபராக்கிய நாட்டுக்கோழி முட்டை!
PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

மாதம், 3 லட்சம் கோழி முட்டைகள் விற்பனை செய்யும், 'அதிபன் பார்ம்ஸ்' நிறுவனரான, பெரம்பலுார் மாவட்டம், அயன்பேரையூரைச் சேர்ந்த மாதவன்:
என் அப்பா விவசாயி. எனக்கும் சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பி.இ., முடித்து, சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையின் அவசரம், பரபரப்பெல்லாம் என் இயல்புக்கு பொருந்தி வரவில்லை.
அதனால், வேலையை விட்டு ஊருக்கு வந்து, நாட்டுக் கோழி பண்ணை வைக்க முடிவெடுத்தேன். அதனால், கோழி வளர்ப்பு குறித்து முழுதாக கற்றுக் கொண்டேன். முதலில், 2,600 கோழிக் குஞ்சுகளை வாங்கி, 2 ஏக்கரில் வேலி போட்டு உலவ விட்டேன். சத்தான தீவனங்கள் தந்தேன். முதலில், 1,400 முட்டைகள் கிடைத்தன.
இவற்றை ஒரு மொத்த விற்பனையாளருக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தேன். பணம் வந்து சேர தாமதம் ஆனது; கூடவே கொ ரோனா ஊரடங்கும் வந்தது.
இந்த நெருக்கடியான நேரத்தில் என் கல்லுாரி நண்பன், இணை நிறுவனராக என் நிறுவனத்திற்குள் வந்தான். அவன் மூலம் வந்த முதலீடு, தொழிலுக்கு உயிர் கொடுத்தது.
அந்த தருணத்தில் இந்தோனேஷியாவில், 'கேஜ் ப்ரீ' கோழி வளர்ப்பு குறித்து ஒரு பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
'கேஜ் ப்ரீ' என்பது தனித்தனி கூண்டுகளில் கோழிகளை அடைக்காமல் பெரிய ஷெட்டில் மேயவிட்டு வளர்ப்பது தான். இந்தியாவில் இதை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன; ஆனால், முதலீடு மிகவும் அதிகம்.
அது வரை வெளி முதலீடுகள் குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் தமிழக அரசின், 'ஸ்டார்ட்அப் டி.என்.,' குறித்து தெரிய வரவே, அதற்கு விண்ணப்பித்தேன். 2.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, உடனடியாக, 1.18 கோடி ரூபாய் தந்த னர்.
பெரிய ஷெட் அமைத்து, 10,000 கோழிக் குஞ்சுகள் வாங்கினேன். இந்த தருணத்தில், 'பீப்பிள் பார் அனிமல்' என்ற தொண்டு நிறுவனம் எங்களின் பணிகளை கவனித்து, 1.66 கோடி ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்க முன்வந்தது.
அதற்கு அவர்கள் கேட்டது, 1 லட்சம் கோழி கள் வளர்க்கணும் என்பது தான். அவர்களே, அதற்கான இயந்திரங்களை ஜெர்மன் நாட்டில் இருந்து வாங்கி தந்தனர். அதை வைத்து பிரமாண்ட, 'ஹைடெக்' பண்ணையை உருவாக்கினோம்.
எங்கள் முட்டையில், 'விட்டமின் டி' சத்து அதிகமாக இருக்கும். 'ஒமேகா 3' என்ற நல்ல கொழுப்பும் இருக்கும். இதை பரிசோதித்து சான்றிதழும் வாங்கி உள்ளோம்.
இந்தியா முழுக்க எங்கள் முட்டைகள் விற்பனைக்கு செல்கின்றன. மாதம், 3 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்கிறோம். ஆனாலும், தேவை பல மடங்கு இருப்பதால், கோழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம்.