/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மனைவி கொடுத்த தைரியம் தான் என் வளர்ச்சிக்கு காரணம்!
/
மனைவி கொடுத்த தைரியம் தான் என் வளர்ச்சிக்கு காரணம்!
மனைவி கொடுத்த தைரியம் தான் என் வளர்ச்சிக்கு காரணம்!
மனைவி கொடுத்த தைரியம் தான் என் வளர்ச்சிக்கு காரணம்!
PUBLISHED ON : ஜூலை 16, 2025 12:00 AM

'கீரைக்கடை டாட் காம்' என்ற நிறுவனம் மூலமாக, மதிப்பு கூட்டப்பட்ட கீரை சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வரும், ஸ்ரீராம் பிரசாத்:
கடந்த, 2003ல் பி.இ., முடித்ததும், மதுரையில் ஒரு, 'வெப் டிசைனிங்' கம்பெனி ஆரம்பித்தேன்; நல்ல பிசினஸ். ஆஸ்திரேலியா, அமெரிக்கா என அலுவலகங்கள் திறந்தேன். இதற்கிடையில் எனக்கு விவசாயம் செய்ய ஆசை வந்தது. மாடித்தோட்டம் அமைத்தேன். அதில் எளிதாக வளர்ந்தது கீரைகள் தான்.
மாடித் தோட்டத்திற்கு விதைகள் வாங்கும்போது கோவையில் ஒரு இயற்கை விவசாயியிடம், 'உங்களிடம் வந்து விவசாயம் கற்றுக் கொள்ளலாமா?' என்று கேட்டதும், அவர் சம்மதித்தார். அங்கு முழு நேர விவசாயி ஆனேன்.
அவர், 6 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவர் வயலில் விளையும், 50 வகையான கீரைகளை மொத்தமாக நானே அறுவடை செய்து கொள்கிறேன் என்று கூறி, அதற்கான பணத்தையும் அவரிடம் தந்து விட்டேன்.
வங்கியில் லோன் போட்டு, ஆம்னி வேன் ஒன்று வாங்கி, ஒருநாள் மாலை நேரத்தில், 150 கீரை கட்டுகளை வேனில் வைத்து ஒரு அபார்ட்மென்டிற்கு சென்றேன். அனைவரும், 'கீரை நல்லா இருக்கு' என்று கூறினரே தவிர, எவரும் வாங்கவில்லை.
அப்போது ஒரு பெரியவர், 'தம்பி, கீரை எல்லாம் நல்லா தான் இருக்கிறது. ஆனால், காலையில் கொண்டு வா' என்று கூறினார். மறுநாள் காலை, 75 கட்டுகள் எடுத்துச் சென்றேன்; 15 நிமிடத்தில் விற்று விட்டது; மூன்று மாதத்தில் போனில் ஆர்டர் செய்கிற அளவுக்கு விற்பனை வளர்ந்தது. உடனே, 'கீரைக்கடை டாட் காம்' என்ற இணையதளம் மற்றும் 'ஆப்' தயார் செய்தேன். வெளிநாடுகளில் இருந்தும் கேட்க ஆரம்பித்தனர்.
கீரையின் ஸ்பெஷலே அதன் பசுமை தான். ஊர் விட்டு ஊர் அனுப்பினால் பசுமை இருக்காது. அதனால், மதிப்புக்கூட்டி பார்க்கலாம் என்று முடிவு செய்து, கீரையை பவுடராக்கி, சூப் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
பிளாஸ்டிக் சேர்க்காமல், பேப்பர் பேக் வடிவத்தில், முதலில் முருங்கைக்கீரை சூப் கொண்டு வந்தேன். சுடுதண்ணீரில் போட்டால் சூப் தயாராகிவிடும்; நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து முடக்கத்தான், துாதுவளை, வல்லாரை, அஸ்வகந்தா சூப்களை அறிமுகப்படுத்தினோம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தேன்.
தற்போது, 12 வகை சூப்கள் தயாரிக்கிறோம். 35 பேர் முழு நேரமாக வேலை செய்கின்றனர். பிசினஸ் ஆரம்பித்த இந்த ஆறு ஆண்டுகளில், நிறைய தோற்று இருக்கிறேன். 'போனதை விடுங்கள்; அடுத்து என்னன்னு யோசிங்க' என்று, என் மனைவி கொடுத்த தைரியம் தான், என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.