இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக மாற்றுவதே இலக்கு!
இயற்கை விவசாயத்திற்கு முழுமையாக மாற்றுவதே இலக்கு!
PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:48 AM

இயற்கை விவசாயம், பண்ணை தொழில்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை, 'வெல்லும் வேளாண்மை' என்ற பெயரில் வழங்கி வரும், கோவை மாவட்டம், ஆனைமலையை சேர்ந்த, 29 வயதாகும் உதயசந்திர மூர்த்தி:
நாங்கள் பாரம்பரிய விவசாய குடும்பம். எனக்கு சிறு வயது முதலே விவசாயத்தில் ஈடுபாடு உண்டு. எங்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தது; பொருளாதார சூழ்நிலையால் விற்று விட்டோம்.
வேளாண்மை பட்டய படிப்பை, இரண்டு ஆண்டுகள் படித்தேன். அதில் விவசாய தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், நாட்டுக் கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு தொடர்பான அடிப்படை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன்.
படிப்பு முடித்ததும், பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையங்களில் கள அலுவலராக வேலை பார்த்ததில் நேரடி அனுபவம் கிடைத்தது. நான் கற்ற விஷயங்களை, விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதன் வாயிலாக வருமானம் பார்க்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. குடும்ப வாழ்வாதாரத்திற்கு, 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.
விவசாயம் சார்ந்து பணியாற்றக்கூடிய நண்பர்களுடன் இணைந்து, 2018ம் ஆண்டில், 'வெல்லும் வேளாண்மை' என்ற அமைப்பை துவக்கி, சமூக வலைதளமான, 'வாட்ஸாப்'பில் குழுக்களை உருவாக்கினேன்.
அதில், விவசாயிகள், இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்கள், விவசாயம் மற்றும் பண்ணை தொழில் சார்ந்த வல்லுநர்களை இணைத்தேன். தொடர் செயல்பாடுகளால், தற்போது, 6,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் இணையதளம் வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்; கட்டணம் வாங்குவதில்லை.
கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, மூலிகை வைத்தியம், நாட்டுக் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சிறுதானியங்களில் மதிப்பு கூட்டல் உட்பட, 70க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பயிற்சிகள் கொடுக்கிறோம். இதனால், பலரும் பயன் அடைந்து வருகின்றனர்.
ரசாயன உரங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, விவசாயிகளை முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது தான், எங்கள் அமைப்பின் முதன்மையான நோக்கம்.
'விவசாயத்துக்கு சேவை செய்கிறேன்னு சொல்லி, இப்படி பொழுதை வீணாக்கிட்டு இருக்கியே' என்று, பலரும் கேட்கின்றனர். எல்லாரும் இப்படி நினைத்து ஒதுங்கினால், நாட்டில் எந்த நல்ல காரியமும் நடக்காது.
தொடர்புக்கு:
95977 69948
