/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பில்லியன் டாலர் கம்பெனியாக மாற்றுவதே இலக்கு!
/
பில்லியன் டாலர் கம்பெனியாக மாற்றுவதே இலக்கு!
PUBLISHED ON : மே 13, 2023 12:00 AM

குமரி மாவட்டம் நாகர்கோவிலில், 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவக்கிய, 'பினோஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்' என்ற, ஐ.டி., கம்பெனியை, இன்று, 50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அளவுக்கு மாற்றியது குறித்து கூறும், அதன் நிறுவனர் அருண் ராஜிவ் சங்கரன்:
பிறந்தது, வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில். சிறு வயதில் இருந்தே, 'பிசினஸ்' செய்ய வேண்டும் என்பது, என்னோட கனவு. 2011ல் இன்ஜினியரிங் முடித்த கையோடு, 'ஆர்கிளாசிக் சொல்யூஷன்' என்ற பெயரில், சின்ன சாப்ட்வேர் கம்பெனியை துவக்கினேன்.
'வெப் டெவலப்பிங், சாப்ட்வேர் சொல்யூஷன்' போன்ற பணிகளை, அந்தக் கம்பெனி வாயிலாக செய்தேன். இருப்பினும், சில காரணங்களால், அந்தக் கம்பெனியை மூட வேண்டியது நேரிட்டது.
இதையடுத்து, சென்னையில், 'சாப்ட்வேர் டெவலப்மென்ட்' கம்பெனியில், இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். பின், 2018ல், 'பினோஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்'டை, 1 லட்சம் ரூபாய் முதலீட்டில், நாகர்கோவிலில் துவக்கினேன்.
'பைனான்ஷியல் ஆபரேட்டிங் சிஸ்டம்' என்பதன் சுருக்கமே, 'பினோஸ்!' எங்கள் கம்பெனிக்கு, ஆட்களை வேலைக்கு எடுக்கும் போது, பட்டப்படிப்புக்கு முக்கியத்துவம் தர மாட்டோம்; திறமைக்கு தான் முக்கியத்துவம் தருவோம்.
இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் மாதிரி, வெளிநாடுகளில் செயல்படும், 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள் தான் எங்களின் வாடிக்கையாளர்கள்.
அவர்கள் ஒருமுறை எங்கள் சாப்ட்வேரை பயன்படுத்துவதோடு, பிசினஸ் முடிந்து விடாது. தொடர்ந்து அவர்கள் பயன்படுத்துவதால், மாதந்தோறும் எங்களுக்குப் பணம் வந்தபடியே இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து நிறைய வாடிக்கையாளர்கள் வந்த பின், டாலரில் எங்களுக்கு வருமானம் வரத் துவங்கியது. எங்கள் கம்பெனி வருவாயில், 10 முதல், 20 சதவீதம் லாபமாகும்.
கிடைத்த லாபத்தை திரும்பவும் கம்பெனியில் முதலீடு செய்கிறோம். கடந்த ஆண்டு எங்கள் நிறுவனத்திற்கு, 2.5 கோடி ரூபாய் வருமானம் வந்தது.
அடுத்த ஆண்டு, எங்கள் வருமானத்தை ஐந்து மடங்காக அதிகரிக்க வேண்டும் என்ற, லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறோம். பில்லியன் டாலர் கம்பெனியாக மாற்ற வேண்டும் என்பது தான் என் கனவு.
'சாப்ட்வேர்' கம்பெனி துவங்குவதற்கு சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என்று தான் செல்வர்.
ஆனால், நான் சொந்த ஊரிலேயே, ஐ.டி., கம்பெனி துவங்கினேன். இன்று, 15 நாடுகளில் உள்ள, 50 நிறுவனங்கள் எங்களின் சாப்ட்வேரை தான் பயன்படுத்துகின்றன.

