/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கட்டாய கண் தானம் திட்டத்தை அரசு கொண்டு வரணும்!
/
கட்டாய கண் தானம் திட்டத்தை அரசு கொண்டு வரணும்!
PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி., டாக்டர் ஆர்.சிவகுமார்:
நான், ஈரோடு எஸ்.பி.,யாக இருந்தபோது, மலைவாழ் மக்கள் 18 பேருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனை வாயிலாக கண் அறுவை சிகிச்சை செய்ய உதவினோம்.
ஒருமுறை, அந்த மலைவாழ் மக்களுக்கு தீபாவளி சமயத்தில் பட்டாசுகளும், மைசூர்பாகும் வழங்கினோம். அப்போது பார்வையற்ற, 70 வயது முதியவர் ஒருவர், 'இதில் திரியே இல்லையே' என கேட்டார்.
எனக்கு கண் கலங்கி விட்டது. 70 வயது வரை இப்படி ஒரு இனிப்பு இருக்கிறது என்று அறியாத மக்களும் இருக்கின்றனரே என வருந்தினேன். பிறருக்கு சேவை செய்வதற்கான மனநிலை அங்கு தான் ஆரம்பித்தது.
இந்தியா முழுதும், 20 கோடி பேர் கண் பார்வை பாதிப்புடன் உள்ளனர். பொதுவாகவே ஒருவர் இறந்து விட்டால், ஆறு மணி நேரத்திற்குள் அவருடைய கண்களை தானம் செய்தாக வேண்டும்.
விபத்தில் இறப்பவர்களின் கண்களில் இருந்து, 'கார்னியா' எனப்படும் கருவிழிப்படலம் கிடைத்தாலே, 80 சதவீதம் மக்களுக்கு பார்வை கிடைக்கும்.
நான் காவல் துறை அதிகாரி என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் எனக்கு பரிச்சயம்.
நாங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பதால், அனைத்து மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடனும் தொடர்பு கொண்டு, ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அது குறித்த விபரங்களை பகிரச் சொல்வேன்.
அப்படி அவர்கள் விபரங்கள் தரும்போது, உடனடியாக அந்த தகவலை, நான் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பகிர்வேன். அறக்கட்டளை உறுப்பினர்களும் அந்த ஊருக்கு துரிதமாக சென்று விடுவர்.
சம்பந்தப்பட்ட நபரின் உறவுகள் அனுமதியுடன் மட்டுமே கண்களை தானமாக பெறுகிறோம்.
கண் தானம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் உள்ளது. தனிமனித உரிமை சார்ந்த ஒன்று என்றாலும்கூட, 'விபத்தில் இறக்கும் அனைவரின் கருவிழி படலத்தையும் எடுக்கலாம்' என, கட்டாய கண் தான திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
விபத்தில் இறந்தவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம். இறந்த நபர் குடித்திருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் மரணமா என்பதை பரிசோதிக்க, இறந்தவர்களின் முக்கிய உடல் உறுப்புகள் பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன.
இத்தனை நிகழ்வுகள் நடக்கும் அந்த உடலில், ஒரு சின்ன கீறல் வாயிலாக இன்னொருவருக்கு கண் பார்வை கிடைக்கும் என்றால், அதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்பது தான் என் ஏக்கம்.
இது தவிர, 'காக்கிப்பூவின் கவிதைகள், தமிழின் கணக்கும் தமிழனின் கணக்கும், நீர் மகன், பொன்மகள் வந்தாள்' என, பல புத்தகங்களும் எழுதி உள்ளேன்.