/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சிலம்பம் கற்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
/
சிலம்பம் கற்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
PUBLISHED ON : ஜன 24, 2025 12:00 AM

தேசிய அளவில் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று, 10க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கியுள்ள, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளர் சூர்யா:
நானும், என் அக்காவும் சிலம்பம் என்றால் என்னவென்றே தெரியாத சிறு வயதிலேயே சிலம்பம் கற்க ஆரம்பித்தோம்.
என் அம்மாவிற்கு, நாங்கள் சிலம்பம் கற்பதில் ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை. அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வரோ என்ற பயம்தான் அதற்கு காரணம்.
'பெண்களுக்கு எதற்கு சிலம்பம்' என்று, பலரும் கேலியாக கேட்டுள்ளனர். எனக்கு 11 வயதாகும் போதுதான், சிலம்பம் தான் என் வாழ்வின் முழு இலக்கு என்பதை உணர்ந்தேன்.
கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து சிலம்பம் கற்று, தற்போது சுப்ரமணிய ஆசான் சமூக கலை மன்றத்தின் மூத்த சிலம்பப் பயிற்சியாளராக இருக்கிறேன்.
பொதுவாக, 5 முதல் 50 வயது வரையுள்ள யார் வேண்டுமானாலும் சிலம்பம் கற்றுக் கொள்ளலாம். ஒருவர் முழுமையாக சிலம்பம் கற்றுக்கொள்ள, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்.
இதைக் கற்றுக்கொள்வது, மிக அதிக அளவில் தன்னம்பிக்கையை கொடுக்கும். பெண்கள் இரவு நேரத்தில் துணிச்சலுடன் தனியாக வெளியே செல்லும் தைரியத்தை சிலம்பம் கற்றுக் கொடுக்கிறது.
பள்ளிகளில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் சிலம்பம், கல்லுாரி விளையாட்டாகவும் மாற வேண்டும். சிலம்பம் கற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.
மாணவர்கள் சிலம்பம் கற்று, பரிசுகளும், சான்றிதழ்களும் அதிகளவில் பெறும்போது அவர்களுக்கு, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் கல்லுாரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
'நானொரு சிலம்ப வீராங்கனை. என் உயிரினும் மேலான கலைதான் வீரச்சிலம்பம். இந்த சிலம்பக் கலையை தீய செயல்களுக்கு பயன்படுத்த மாட்டேன்' என்ற முழக்கத்துடனேயே, ஒவ்வொரு நாளும் என் சிலம்பப் பயிற்சி ஆரம்பமாகிறது.
'வெற்றியே என் மூச்சு; வீரமே என் பேச்சு; வாழ்க சிலம்பம்' என்று என் பயிற்சியாளர்கள், சிலம்பப் பயிற்சியின்போது உரத்த குரலில் முழங்குகின்றனர்.
என் திறமைகளையும், சேவை உணர்வையும் அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் அனிதா விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளேன்.
சிலம்பத்துடன், கராத்தே, ஜிம்னாஸ்டிக், பறையாட்டம், யோகா ஆகியவற்றிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்கு சிலம்பக் கலையை இலவசமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்.

