/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இதுவரை , அதிக கட்டணம், 500 ரூபாய்
/
இதுவரை , அதிக கட்டணம், 500 ரூபாய்
PUBLISHED ON : ஜூன் 15, 2025 12:00 AM

கடந்த 50 ஆண்டுகளாக, ஏழைகளிடம் கட்டணம் வாங்காமல் மருத்துவம் பார்த்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரைச் சேர்ந்த, 80 வயதான மருத்துவர் பார்வதி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் பிறந்தேன்.
கல்லுாரியில் பி.யு.சி., முடித்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதால், மெட்ராஸ் மெடிக்கல் கல்லுாரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. 22 வயதில், 'ஹவுஸ் சர்ஜன்' முடித்து, அங்கேயே சீனியர் ஹவுஸ் சர்ஜன் முடித்தேன். 1970ல், திருவையாறை சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் என்பவருடன் திருமணம் நடந்தது.
கணவருக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதலாகவே இங்கு வந்தோம். இந்த ஊரில் எந்த வசதியும் கிடையாது.
மின்சாரமும் எப்போதாவது தான் வரும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் நானும் வீட்டில் பிரசவம் பார்ப்பேன். 1995ல் புயலின்போது ஒரு மாதம் மின்சாரம் இல்லை. அப்போது, நான் பார்த்த ஒரு பிரசவம் கூட தோல்வியில்லை.
நாங்கள் இருவரும் மருத்துவத்தையே முழு நேர தொழிலாக செய்து வந்ததால், இதுவரை வெளியூர் எங்கும் சென்றதில்லை. ஓட்டு வீட்டில் தான் எங்களின் பல ஆண்டு வாழ்க்கை கழிந்தது.
இத்தனை படிப்பு படித்தும், எங்களால் ஒரு நல்ல வீட்டில் வசிக்க முடியவில்லையே என்று அப்போதெல்லாம் வருத்தப்பட்டு உள்ளேன்.
அதன்பின், கணவருக்கு உடல்நலம் சரியில்லாமல் விருப்ப ஓய்வு பெற்றுவிட, வீட்டிலேயே இருவரும் மருத்துவம் பார்த்து வந்தோம்.
கணவருக்கு எப்போதும் பணத்தாசை இருந்தது இல்லை. பிரசவத்திற்கு வருவோரிடம் கூட மாத தவணையில் பணம் வாங்கி இருக்கிறோம். 2014ல் என் கணவர் காலமானார்.
அதன்பின் நான் மட்டுமே தனியாக மருத்துவம் பார்க்க துவங்கினேன். இதுவரை 4,000 பிரசவங்கள் பார்த்துள்ளேன்.
பணத்தை விட மக்கள் என் மீது பிரியமாக இருந்து, 'இது நீங்கள் பிரசவம் பார்த்ததில் பிறந்த குழந்தை' என்றபடி தங்கள் மகன், மகள்களை காட்டும்போது எனக்கு கிடைக்கும் சந்தோஷமே கோடி ரூபாய்க்கு இணையாக இருக்கும்.
என் மகன் பி.இ., முடித்து, பெங்களூரில் பணி செய்கிறார். மருமகள், கூகுள் நிறுவனத்தில் டைரக்டராக இருக்கிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவம் பார்க்கிறேன். இன்னும் அலுக்கவில்லை. வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். வீட்டு ஹால் தான் கிளினிக்.
இத்தனை ஆண்டுகளாக ஏழைகளிடம் சிகிச்சைக்காக பணம் வாங்கியதில்லை. அன்புடன், 10 ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன். சிகிச்சைக்காக வந்த ஒருவர் பிரியமுடன் கொடுத்த, 500 ரூபாய் தான் இதுவரை வாங்கிய அதிக கட்டணம்.
*****************************
சரியான வழிகாட்டி அமைந்துவிட்டால் முத்திரை பதிப்பர்!
திருநங்கையருக்கான, 2025 ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருதை பெற்றுள்ள துாத்துக்குடியை சேர்ந்த பொன்னி: எங்கள் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். எனக்கு இரு அண்ணன், இரு அக்கா.
கடைசியாக நான் ஆண் குழந்தையாக இருந்தாலும், சிறு வயது முதலே என்னிடம் பெண்மைத்தன்மை இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன்.
அம்மா மட்டுமே எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். எவராவது ஏதாவது கூறினால், 'அது என் பிள்ளை. அது இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்' என்று என்னை சுதந்திரமாக வளர்த்தார்.
இயற்கையிலேயே எனக்கு நடனம் ஆடும் திறமை இருந்தது. குறிப்பாக, பரதநாட்டிய கலையை முறையாக கற்க வேண்டும் என்பது என் மிகப் பெரிய கனவு.
முதலில் துாத்துக்குடியில் இருந்த தமிழக அரசின் இசைப்பள்ளியில் சேர்ந்து பரதநாட்டியம் கற்றேன். அத்துடன் துாத்துக்குடியில் உள்ள தனியார் பரதக்கலை வகுப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
அதனால், ஒரு தட்டில் தேங்காய், பழத்துடன் அந்த நாட்டியப் பள்ளிக்கு சென்றேன்; ஆனால் சேர்க்க மறுத்தனர். நான் எதுகுறித்தும் கவலைப்படாமல், பல நாட்கள் நாட்டிய பள்ளி வாசலில் தினமும் நின்றேன். என் ஆர்வத்தை பார்த்து, நடனம் கற்றுக் கொடுத்தனர்.
அப்போது தான், 'நாமும் மிகப் பெரிய பரதநாட்டிய கலைஞராகி, என்னைப் போன்றவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் இதை கற்றுத்தர வேண்டும்...' என்ற வைராக்கியம் ஏற்பட்டது.
கூவாகம் திருவிழாவில் என் நடனத்தை பார்த்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கையர், என்னை அவர்கள் ஊருக்கு வரவழைத்து, அங்குள்ள திருநங்கையருக்கு நடனம் கற்றுத்தர கூறினர். அங்கு அவர்கள் எனக்கு கொடுத்த மரியாதை, கூடுதல் பலத்தை கொடுத்தது.
பரதக் கலையில் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காக சென்னைக்கு பயணமானேன். சென்னையில் தான் அதிகம் கேலி, கிண்டலுக்கு ஆளானேன்; நாளடைவில் அதுவும் பழகிவிட்டது.
சென்னை திருவான்மியூரில் உள்ள, நாட்டியாச்சாரியார் டாக்டர் சிவகுமாரின், 'சிவகலாலயம்' நாட்டிய அகாடமியில் சேர்ந்து, மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தேன்.
அப்படியே மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லுாரியில், எம்.எஸ்.டபிள்யு படித்து, தொண்டு நிறுவனங்களில் பணிபுரிந்தேன்.
கடந்த 2007 ல் சென்னை கொருக்குப்பேட்டையில், 'அபிநய நிருத்யாலயா' என்கிற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை துவக்கினேன்.
அங்கு திருநங்கையருக்கு முன்னுரிமை கொடுத்து நடனம் கற்றுக் கொடுத்தாலும், என் பள்ளியில் அனைவரும் சேரலாம்.
சரியான வழிகாட்டி அமைந்துவிட்டால், அனைவருமே முத்திரை பதிப்பர்!